வீடற்ற நபர்களுக்கு வீடு வழங்கப்பட்டதற்கான சான்றிதழ்கள் வழங்கும் நிகழ்வு
உலக குடியிருப்பு தினத்தை முன்னிட்டு யுத்தத்தினால் இடம்பெயர்ந்து மீளக்குடியேறிய வீடற்ற நபர்களுக்கு வீடு வழங்கப்பட்டதற்கான சான்றிதழ்கள் வழங்கும் நிகழ்வு நேற்றுமுன்தினம் (03) நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு பிரதி அமைச்சர் ரீ.பீ. சரத் அவர்களின் தலைமையில் மாவட்ட செயலக பிரதான மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது.
"சொந்தமாக இருக்க இடம் ஒரு அழகான வாழ்க்கை" எனும் தொனிப்பொருளின் கீழ் வீடமைப்பு திட்டங்கள் மாவட்ட மட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.
வீடமைப்பு திட்டங்கள்
இந்த வீடுகள் 335 வீடுகளாக, அதாவது 9 லட்சம் மதிப்பில் 130 வீடுகளாகவும், 15 லட்சம் மதிப்பில் 205 வீடுகளாகவும் கட்டப்பட்டுள்ளன.
மூதூர், கிண்ணியா, வெருகல், பட்டினமும் சூழலும், மொறவெவ, தம்பலகாமம், கோமரன்கடவல, குச்சவெளி ஆகிய பிரதேச செயலகங்களை உள்ளடக்கி யுத்தத்தினால் இடம்பெயர்ந்த மக்களில் பல சிறப்புக் குழுக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட 335 பயனாளிகளில் 100 பேருக்கு அடையாளமாகவும் சட்டப்பூர்வமாகவும் சான்றிதழ்கள் வழங்கி வைக்கப்பட்டன.
அரசாங்கத்தின் கொள்கையின்படி, சம்பந்தப்பட்ட பகுதியின் பிரதேச செயலாளரின் பரிந்துரையின் பேரில், தகுதிவாய்ந்த மக்களுக்கு வீடுகளை வழங்குவதே முக்கிய நோக்கம் என்று மாவட்ட அரசாங்க அதிபர் டபிள்யூ. ஜி. எம். ஹேமந்த குமார இதன்போது தெரிவித்தார்.
திருகோணமலை மாவட்டத்தில் 873 உள்ளகச் சாலைகள் தற்போது புதுப்பிக்கப்பட்டு வருவதாக நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு பிரதி அமைச்சர் ரீ.பீ. சரத் தெரிவித்தார்.
முக்கிய நோக்கம்
இந்த ஆண்டு மாவட்டத்தில் நூறு வீடுகளை நிர்மாணிப்பதற்கான பணிகளை நகர அபிவிருத்தி, நிர்மாணிப்பு மற்றும் வீடமைப்பு அமைச்சு தொடங்கியுள்ளது என்றும் அவர் கூறினார்.
சிறப்புக் குழுக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஏழைக் குடும்பங்களுக்கு இந்த வீடுகள் வழங்கப்படும் என்றும், தற்போதைய அரசாங்கத்தின் முக்கிய நோக்கம் இந்த வீடுகளின் கட்டுமானப் பணிகளைத் தொடங்கி 02 மாதங்களுக்குள் பொதுமக்களிடம் ஒப்படைப்பதாகும் என்றும் பிரதி அமைச்சர் மேலும் தெரிவித்தார்.
குடியிருப்புத் தினத்தையொட்டி, ஜனாதிபதியின் முன்னிலையில், நாட்டின் பல்வேறு பகுதிகளில் 1000க்கும் மேற்பட்ட குடும்பங்களுக்கு புதிய வீடுகள் மற்றும் வீட்டு உரிமைகள் வழங்கப்படுகின்றன.
அந்த வகையில் இதன் ஒரு பகுதியாக, திருகோணமலை மாவட்டத்திலும் வழங்கப்பட்டது.
இதன்போது நாடாளுமன்ற உறுப்பினர்களான ரொஷான் அக்மீமன, மாவட்டமேலதிகஅரசாங்கஅதிபர் எஸ்.சுதாகரன், மாவட்ட திட்டமிடல் பணிப்பாளர், பிரதேச செயலாளர்கள், துறைசார்ந்த அதிகாரிகள் மற்றும் பயனாளிகள் பலரும் கலந்து கொண்டனர்.






