கடன் அட்டை, டெபிட் அட்டை பயனாளர்களுக்கு மத்திய வங்கி வெளியிட்ட அறிவிப்பு
கடன் அட்டை அல்லது டெபிட் அட்டைகளை பயன்படுத்தி செய்யப்படும் பரிவர்த்தனைகளுக்கு வாடிக்கையாளர்களிடமிருந்து 2.5 சதவீத கூடுதல் கட்டணத்தை வசூலிக்க சட்டப்பூர்வமாக அனுமதிக்கப்படவில்லை என இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.
அட்டை செலுத்தும் இயந்திரத்தை பெறும்போது வணிகர்களுக்கும் வங்கிகளுக்கும் இடையிலான ஒப்பந்தத்தின் கீழ், கூடுதல் கட்டணத்தை வாடிக்கையாளரிடம் அறிவிட முடியாது என மத்திய வங்கி தெரிவித்துள்ளது.
பட்டியலிடப்பட்ட விலையை விட அதிகமாக ஒரு வணிகர் வசூலித்தால், வாடிக்கையாளர்கள் உடனடியாக தங்கள் அட்டை வழங்கும் வங்கிக்கு தெரிவிக்க வேண்டும் என மத்திய வங்கி அறிவித்துள்ளது.
அதிகரித்து வரும் முறைப்பாடு
சில கடைகள் மற்றும் சேவை வழங்குநர்கள் அட்டை செலுத்தும் கட்டணங்களுக்கு கூடுதல் கட்டணங்களை வசூலிப்பதாக வாடிக்கையாளர்களிடமிருந்து அதிகரித்து வரும் முறைப்பாடுகளை அடுத்து மத்திய வங்கி இதனை தெளிவுப்படுத்தியுள்ளது.



