ஜனாதிபதி தலைமையில் சேர். பொன் அருணாச்சலத்தின் நூற்றாண்டு நினைவு தினம்
சுதந்திரமான தேசத்தைக் கட்டியெழுப்ப, சேர்.பொன் அருணாச்சலத்தின் "இலங்கையர்" எண்ணக்கருவை "இலங்கையர்களின் தேவைகள்" என்ற வகையில் மேம்படுத்த அர்ப்பணிப்புடன் செயற்படுவதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
அந்த வேலைத்திட்டத்தைப் பலப்படுத்தும் வகையில் யுத்தம் சார்ந்த பிரச்சினைகள் அனைத்துக்கும் 2025இற்கள் தீர்வு காண எதிர்பார்ப்பதாகவும் ஜனாதிபதி கூறியுள்ளார்.
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நேற்று (09.01.2024) நடைபெற்ற சேர்.பொன்.அருணாச்சலத்தின் நினைவுதின நூற்றாண்டு நிகழ்விலேயே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
நினைவு தின நிகழ்வு
இந்த நினைவு தின நிகழ்வானது ஜனாதிபதி செயலகத்தின் முன்பாக அவரது சிலை அமைக்கப்பட்டிருக்கும் வளாகத்தில் நடைபெற்றது.
இதன்போது சேர்.பொன். அருணாச்சலத்தின் சிலைக்கு மலர் அஞ்சலி செலுத்திய ஜனாதிபதி, அவரது குடும்பத்தாருடனும் சிநேகபூர்வமாக கலந்துரையாடியுள்ளார்.
சேர்.பொன்.அருணாச்சலம் தமிழ், சிங்கள, முஸ்லிம் என்று அல்லாமல் இலங்கையர் என்ற எண்ணக்கரு தொடர்பில் அதிக நம்பிக்கை கொண்டிருந்ததை நினைவுகூர்ந்த ஜனாதிபதி, அந்த கொள்கையை பின்பற்றிய டீ.எஸ்.சேனநாயக்க அனைத்து இனத்தவரையும் மதத்தவரையும் ஒன்றிணைத்துக்கொண்டு நாட்டின் முன்னேற்றத்திற்கு வழிவகுத்தார் என்றும் கூறியுள்ளார்.
சரிவடைந்த பொருளாதாரத்தை மீளக் கட்டியெழுப்பும் பயணத்தை ஆரம்பித்திருக்கும் தேசம் என்ற வகையில், அனைவரும் ஒன்றுபடுவதே சேர்.பொன். அருணாச்சலத்திற்கு வழங்கும் உயரிய கௌரவமாகும் எனவும் ஜனாதிபதி சுட்டிக்காட்டியுள்ளார்.
மேலும் முன்னாள் அமைச்சர் டீ.எம்.சுவாமிநாதன் மற்றும் பொன்னம்பலம் அருணாசாலத்தின் குடும்ப உறுப்பினர்கள் உள்ளிட்ட பலரும் இந்நிகழ்வில் கலந்துகொண்டிருந்தனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |