கிளிநொச்சியில் கடும் குளிரால் உயிரிழக்கும் கால்நடைகள் தொடர்பில் கள ஆய்வு (video)
கிளிநொச்சியில் சீரற்ற காலநிலை மாற்றத்தால் ஏற்பட்டுள்ள கடும் குளிர் காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் கடும் குளிர் மற்றும் மழை காரணமாக கால்நடைகள் பல உயிரிழந்துள்ளன.
இந்த நிலையில், சீரற்ற வானிலையால் உயிருக்கு போராடும் கால்நடைகளிற்கு கால்நடை வைத்தியர்களால் சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது.
இதேவேளை குறித்த பாதிப்புக்கள் தொடர்பில், கரைச்சி பிரதேச செயலாளர் ஜெயகரன், கால்நடை உற்பத்தி சுகாதார திணைக்களத்தின் கிளிநொச்சி மாவட்ட பிரதி பணிப்பாளர் வைத்தியர் எஸ். கெளரிதிலகன், மாவட்ட இடர் முகாமைத்துவ பிரிவினர் என பலரும் கள ஆய்வு மேற்கொண்டனர்.
இதன்போது, கருத்து தெரிவித்த கால்நடை உற்பத்தி சுகாதார திணைக்களத்தின் கிளிநொச்சி மாவட்ட பிரதி பணிப்பாளர் வைத்தியர் எஸ். கெளரிதிலகன் குறிப்பிடுகையில்,
குறித்த பாதிப்பு தொடர்பில் அறிக்கை தயாரிக்கப்ட்டு உரிய முறையில் சமர்ப்பிக்கப்படும் எனவும், இவ்வாறான காலநிலையின்போது, கால்நடைகளை அவதானமாக வைத்திருக்குமாறும் தெரிவித்துள்ளார்.
முதல் கட்டமாக, கால்நடைகளிற்கு அண்மித்து தீமூட்டி சூட்டினை வழங்குமாறும், பாதிப்புக்கள் ஏற்படின் கால்நடை வைத்தியர்களை அணுகுமாறும் தெரிவித்துள்ளார்.
மேலும், கண்டாவளை பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட கல்லாறு, தருமபுரம், பெரியகுளம், கல்மடுநகர், ஊரியான், கோரக்கன் கட்டுபோன்ற கிராமங்களில் வாழும் மக்களின் வாழ்வாதாரமும் காலநிலை மாற்றத்தால் பாதிக்கப்பட்டுள்ளது.
கடும் காற்று மற்றும் மழை காரணமாக கிளிநொச்சி மாவட்டத்தில் 172 குடும்பங்களைச் சேர்ந்த 585 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட அனர்த்த முகாமைத்து நிலையம் தெரிவித்துள்ளது.
கரைச்சியில் 5 குடும்பங்களைச் சேர்ந்த 22 பேரும், கண்டாவளையில் 128 குடும்பங்களைச் சேர்ந்த 448 பேரும், பூநகரியில் 3 குடும்பங்களைச் சேர்ந்த 9 பேரும், பளையில் 36 குடும்பங்களைச் சேர்ந்த 106 பேருமாக மொத்தம் 172 குடும்பங்களைச் சேர்ந்த 585 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என மாவட்ட அனர்த்த முகாமைததுவ பிரிவின் புள்ளி விபரங்கள் தெரிவிக்கின்றன.
செய்தி: சுழியன், எரிமலை
முதலாம் இணைப்பு
கிளிநொச்சியில் சீரற்ற காலநிலை மாற்றத்தால் ஏற்பட்டுள்ள கடும் குளிர் மற்றும் மழை காரணமாக 165 க்கு மேற்பட்ட மாடுகள் மற்றும் 3 ஆடுகள் உயிரிழந்துள்ளன.
இந்த சம்பவம் இன்று (9.12.2022) இடம்பெற்றுள்ளது.
இந்த இறப்புக்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்க கூடும் என
கிளிநொச்சி பிராந்திய கால்நடை திணைக்களம் தெரிவித்துள்ளது.
கிளிநொச்சி கௌதாரிமுனை வெட்டுக்காடு கிராமத்தில் 60 மாடுகளும்,நல்லூர் சாமிபுலத்தில் கிராமத்தில் 75 மாடுகளும், பொன்னகர் கிராமத்தில் 13 மாடுகளும், புன்னை நீராவியில் 07 மாடுகளும், நாகேந்திரபுரத்தில் 05 மாடுகளும்,பூநகரியில் 05 மாடுகளுமாக 130 க்கு மேற்பட்ட மாடுகள் இறந்துள்ளதாக கிளிநொச்சி பிராந்திய கால்நடை திணைக்களம் தெரிவித்துள்ளது.
கிளிநொச்சி - கரைச்சி பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட பொன்னகர் பகுதியில் சிவராசா சிவகாந்தன் என்பவரின் பண்ணையில் இருந்த கால்நடைகளே இவ்வாறு உயிரிழந்துள்ளன.
இந்த நிலையில் குறித்த பண்ணையில் உள்ள மேலும் சில கால்நடைகள் உயிருக்காக போராடிக்கொண்டிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதேவேளை திருவையாறு கிராமத்தில் கடும் காற்று காரணமாக மரம் முறிந்து வீழ்ந்ததில் மூன்று ஆடுகள் இறந்துள்ளதோடு, மேலும் பல ஆடுகள் மற்றும் மாடுகள் என்பன காயங்களுக்குள்ளாகியுள்ளன.
கால்நடைகள் உயிரிழப்பு
எனவே அந்த கால்நடைகளை காப்பாற்றும் வகையில் தீ மூட்டும் செயற்பாட்டில் பிரதேச மக்கள் ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சீரற்ற காலநிலை மாற்றத்தால் ஏற்பட்டுள்ள பாதிப்புக்கள்
இதேவேளை இந்த சம்பவம் தொடர்பில் கிராம சேவையாளர் ஊடக மாவட்ட இடர் முகாமைத்துவ பிரிவிற்கு தகவல் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடும் குளிருடன் கூடிய மழை மற்றும் காற்று காரணமாக மரங்கள் முறிந்து
வீழ்தததன் காரணமாகவும் இவ்வாறு கால்நடைகள் இறந்துள்ளதாகவும். இன்று
மதியம்(09) வரை மேற்படி எண்ணிக்கையை உறுதிப்படுத்தக் கூடியதாக இருந்தது
என்றும் தெரிவிததுள்ள கால்நடை திணைக்களம் இந்த சீரற்ற காலநிலை காரணமாக
இறந்த கால்நடைகளின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கலாம் என்றும்
தெரிவித்துள்ளது.
பல மாவட்டங்களில் கடும் குளிருடன் மழை பெய்து வருகின்றது. இந்த நிலையில் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
