அரிசி ஆலைகளில் மோசடி: அதிகரிக்கும் வழக்கு பதிவுகள்
யாழ்ப்பாண மாவட்டத்தில் கடந்த இரண்டு வாரங்களில் அரிசியை அதிக விலைக்கு விற்பனை செய்வது தொடர்பாக 41 வழக்குகள் பதியப்பட்டுள்ளதாக யாழ் மாவட்ட பாவனையாளர்கள் அலுவல்கள் அதிகார சபையின் பிரதி பணிப்பாளர் என்.விஜிதரன் தெரிவித்துள்ளார்.
மாவட்ட செயலகத்தில் இன்று(20) அரிசி கட்டுப்பாட்டு விலை மற்றும் ஏனைய அத்தியாவசிய பொருட்கள் தொடர்பிலான விசேட கலந்துரையாடலில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
மோசடி
இது தொடர்பில் மேலும் கருத்து தெரிவிக்கையில்,“யாழ் மாவட்டம் மாத்திரமல்ல இலங்கை பூராகவும் அரிசி கட்டுப்பாட்டு விலை தொடர்பில் பாரிய பிரச்சினை காணப்படுகின்றது. அமைச்சரவை மட்டத்தில் இதற்கு ஒரு கட்டுப்பாட்டு விலை நிர்ணயிக்கப்பட்டு நடைமுறைக்கு கொண்டு வர வேண்டும் என்ற நோக்கில் இது நடைமுறைப்படுத்தப்படுகின்றது.
அரிசியை அதிக விலைக்கு விற்பனை செய்தால் அதற்கு அதிக தண்டம் மற்றும் நீதிமன்ற தண்டனை உள்ளது.
மக்களுக்கு குறைந்த விலையில் அரிசி சென்றடைய வேண்டும் என்பதற்காக இந்த மாதத்தில் சனி, ஞாயிறு ஆகிய நாட்களில் எமது அதிகார சபையினர் கடமையாற்றி வருகின்றார்கள்.
குறிப்பாக இந்த மாதத்தில் முதலாம் திகதியிலிருந்து அரிசி சம்பந்தமாக 41வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
அவற்றில் கூடுதலாக கட்டுப்பாட்டு விலை என்று பார்க்கும் போது சிறிய கடைகளை நாங்கள் பெரிதாக பரிசோதிப்பதில்லை அதாவது மொத்த வியாபார நிலையங்கள் அரிசி ஆலைகளை நாங்கள் பரிசோதித்திருக்கின்றோம்.
அதனடிப்படையில் பெரும்பாலும் ஆட்டகாரி, மொட்டை கறுப்பன் என்ற அரிசி என்பது வடக்கு மாகாணத்தில் அதிகளவில் காணப்படுகின்றது. அதனை பொறுத்தவரை அதற்கு நிர்ணயம் இல்லை என்ற வகையில் கட்டுப்பாட்டு விலை என்பது நிர்ணயிக்கப்படுவதில்லை.
வர்த்தமானி அறிவித்தல்
தற்போது வெளியிடப்பட்டுள்ள வர்த்தமானி அறிவித்தலில் அவ்வாறு எந்த விதமாகவும் குறிப்பிடப்படவில்லை என்பதோடு சகல அரிசி வகைக்கும் அது பொருந்தும் என்ற ரீதியில் நாங்கள் சகல அரசினையும் ஒரே விதமாக பார்க்க வேண்டியதாகவுள்ளது.
ஆட்டக்காரி அரிசி உற்பத்தியாளர்கள் சரியான விலையினை தமது உற்பத்தி பொருளில் காட்சிப்படுத்துவதில்லை.
யாழ்ப்பாண மாவட்டத்தில் உள்ள அரிசி ஆலைகளின் மூன்றுக்கு மேற்பட்ட அரிசி ஆலைகளை பரிசோதித்திருக்கின்றோம். பரிசோதித்து விலை மாற்றம் தொடர்பிலான வழக்குகளை பதிவு செய்திருக்கின்றோம். அத்துடன் அவர்களின் அரிசி இருப்பு விடயங்கள் தொடர்பிலும் ஆராய்ந்திருக்கின்றோம்.
விலை மாற்றம் தொடர்பில் மூன்று வழக்குகள் பதிவு செய்திருக்கின்றோம். பதுக்கல் தொடர்பில் ஒரு வழக்கு பதியப்பட்டுள்ளது. கட்டுப்பாட்டு விலையை மீறியோருக்கு எதிராக 10 பேருக்கு வழக்கு பதிவு செய்திருக்கின்றோம். இவை உள்ளடங்களாக அரிசி சம்பந்தமாக 41 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது.”என தெரிவித்துள்ளார்.