நாடாளுமன்ற உறுப்பினர் மற்றும் பொலிஸ் அதிகாரி மோதல்: பிறப்பிக்கப்பட்ட உத்தரவு
இரத்தினபுரி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சாந்த பத்மகுமார மற்றும் பொலிஸ் அதிகாரி ஒருவருக்கு இடையிலான வழக்கு புதிய திருப்பத்தை எட்டியுள்ளது.
சூரியகந்த கஞ்சாத் தோட்டச் சுற்றிவளைப்பின் போது ஏற்பட்ட இந்த மோதல் தொடர்பான வழக்கை, பரஸ்பரம் பேசித் தீர்த்துக்கொள்வதற்காக இணக்க சபைக்கு (Mediation Board) பாரப்படுத்துமாறு எம்பிலிபிட்டிய நீதவான் நேற்று (26) உத்தரவிட்டார்.
அறிக்கையை சமர்ப்பிக்க காலக்கெடு
இது தொடர்பான அறிக்கையை ஜூன் 15 ஆம் திகதி சமர்ப்பிக்குமாறும் காலக்கெடு விதிக்கப்பட்டுள்ளது.

பணிநீக்கம் செய்யப்பட்டுள்ள குறித்த பொலிஸ் கான்ஸ்டபிள் மீது, எம்.பி.யின் வாகனத்தை மறித்தமை மற்றும் அச்சுறுத்தியமை ஆகிய குற்றச்சாட்டுகளைச் சுமத்தி பொலிஸார் இந்த வழக்கை தாக்கல் செய்திருந்தனர்.
எனினும், மன்றில் முன்னிலையான சட்டத்தரணி விஜித ஜி. புஞ்சிஹேவா முன்வைத்த வாதங்கள் அதிர்வலைகளை ஏற்படுத்தின.
பொலிஸ் கான்ஸ்டபிள் காயமடைந்து வைத்தியசாலையிலிருந்து வீடு திரும்பிய 6 மணித்தியாலங்களுக்குள் அந்த பொலிஸ் அதிகாரி கைது செய்யப்பட்டார்.
அதிகாரி மீது தாக்குதல்
"எம்.பி உள்ளிட்ட தரப்பினர் அதிகாரி மீது தாக்குதல் நடத்தி, மதுபானப் பொதியால் முகத்தில் அடித்ததாக முறைப்பாடு செய்யப்பட்டு ஒரு மாதமாகியும், இதுவரை ஒருவர்கூட கைது செய்யப்படவில்லை" என சட்டத்தரணி சாடினார்.
சட்டத்தரணியின் குற்றச்சாட்டுக்கு பதிலளித்த பொலிஸார், நாடாளுமன்ற உறுப்பினர் மீதான விசாரணைகள் இன்னும் முடிவடையவில்லை என்ற வழக்கமான பதிலையே முன்வைத்துள்ளனர்.