அமைச்சர் குமார ஜயகொடிக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்ய நடவடிக்கை
மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் குமார ஜயகொடிக்கு எதிரான வழக்கை தாக்கல் செய்யும் நடவடிக்கைகளை இலஞ்சம் , ஊழல் மற்றும் மோசடி தவிர்ப்பு விசாரணை ஆணைக்குழு முன்னெடுத்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தற்போதைய நிலையில் சுமார் 69 வழக்குகள் குறித்த கோப்புகள் தொடர்பில் இலஞ்சம் ,ஊழல் மற்றும் மோசடி தவிர்ப்பு விசாரணை ஆணைக்குழுவின் சட்டப் பிரிவு விசாரணைகளை நிறைவு செய்துள்ளது.
மேற்குறித்த கோப்புகள் இலஞ்சம் ,ஊழல் மற்றும் மோசடி தவிர்ப்பு விசாரணை ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் ரங்க திசாநாயக்கவின் பார்வைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
49ஆம் இலக்க வழக்காக
குறித்த 69 கோப்புகள் தொடர்பான வழக்குகளை விரைவில் தாக்கல் செய்யத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
அவற்றில் அமைச்சர் குமார ஜயகொடிக்கு எதிரான வழக்கு 49ஆம் இலக்க வழக்காக பட்டியலிடப்பட்டுள்ளது.
2015ம் ஆண்டு உரக்கூட்டுத்தாபன டெண்டர் ஒன்றை முறைகேடாக வழங்கியதன் மூலம் அரசாங்க நிதியை துஷ்பிரயோகம் செய்ததாக அமைச்சர் குமார ஜயகொடி மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
சுமார் எட்டு மில்லியன் ரூபாவை துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டின் கீழ் அமைச்சர் குமார ஜயகொடி உள்ளிட்ட மூவருக்கு எதிராக விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வழக்குத் தாக்கல் செய்யப்படவுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |



