அசாத் சாலிக்கு எதிராக பயங்கரவாத தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்கு
மேல் மாகாணத்தின் முன்னாள் ஆளுநர் அசாத் சாலிக்கு எதிராக பயங்கரவாத தடுப்புச் சட்டத்தின் கீழ் கொழும்பு மேல் நீதிமன்றத்தில் குற்றப் பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக சட்டமா அதிபர் இன்று உயர் நீதிமன்றத்தில் அறிவித்துள்ளார்.
முன்னாள் ஆளுநர் அசாத் சாலி கடந்த மார்ச் மாதம் 9 ஆம் திகதி கொழும்பில் நடத்திய செய்தியாளர் சந்திப்பில் வெளியிட்ட கருத்துக்களை அடிப்படையாக கொண்டு இந்த குற்றப் பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
தன்னை தடுப்பு காவல் உத்தரவின் பேரில் தடுத்து வைக்கப்பட்டுள்ளமைக்கு எதிராக அசாத் சாலி தாக்கல் செய்த அடிப்படை மனித உரிமை மீறல் மனு இன்று உயர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுக்கப்பட்ட போது, சட்டமா அதிபர் சார்பில் ஆஜரான பிரதி சொலிசிட்டர் ஜெனரல் திலீப பீரிஸ், சட்டமா அதிபர் சார்பில் வாதங்களை முன்வைத்த போதே இதனை கூறியுள்ளார்.