மாவீரர் நாள் கொண்டாடப்படவுள்ள நிலையில் யாழில் தீவிரப்படுத்தப்பட்டுள்ள கெடுபிடிகள்..
மாவீரர் வாரம் நடைபெற்றுவரும் நிலையில் தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் 71ஆவது பிறந்தநாள் இன்றும்(26) மாவீரர் நாள் நாளையதினம்(28) அனுஷ்டிக்கப்படவுள்ள நிலையில் பொலிஸாரின் சில கெடுபிடிகள் யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றுள்ளது.
வல்வெட்டித்துறை பகுதியில் மாவீரர் தினத்தை அனுஷ்டிக்கும் வகையில் நேற்றையதினம்(25) சோதனையில் ஈடுபட்டவர்கள் தொடர்பாக வல்வெட்டித்துறை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.
மாவீரர் வாரம்
தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தைச் சேர்ந்தவர்கள் சிலரின் சிவில் உடை படங்களுடன் வல்வெட்டித்துறையில் கட்டப்பட்ட பதாகையை அகற்ற சொன்ன வல்வெட்டித்துறை பொலிஸார், குறித்த பதாகையில் உள்ள பாதணி விடுதலைப் புலிகளினை உருவகப்படுத்துவதாக சுட்டிக்காட்டி சிலரிடம் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

தடை செய்யப்பட்ட அமைப்புக்களின் சின்னங்கள், இலட்சிணைகள் பயன்படுத்தாமல் உயிரிழந்தவர்களை நினைவு கூர முடியும் என அரசாங்கம் அறிவித்திருந்த போதும், ஆட்சி மாறியும் காட்சி மாறவில்லை என பொதுமக்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.
இதேவேளை நேற்றையதியம் மாலை மல்லாகம் சந்தி பகுதியில் மாவீரர் நினைவேந்தல் தொடர்பில் இலத்திரனியல் உபகரணத்தில் பாடல் ஒலிக்க விடப்பட்டுள்ளது.
அவ்விடத்திற்கு வந்த தெல்லிப்பழை பொலிஸார் குறித்த உபகரணத்தை கைப்பற்றி வழக்கு சான்றுப் பொருளாக இலக்கமிட்டுள்ளனர்.
மாவீரர் நாள் நாளை வியாழக்கிழமை அனுஷ்டிக்கப்படவுள்ள நிலையில் பொலிஸாரின் கெடுபிடிகள் காணப்படுமா என பொதுமக்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.