கதிரியக்க சிகிச்சை தாமதம் காரணமாக உயிராபத்தை எதிர்கொள்ளும் புற்றுநோயாளிகள்
மஹரகம அபேக்ஷா புற்றுநோய் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் நோயாளிகள் கதிரியக்க சிகிச்சை தாமதம் காரணமாக உயிராபத்தை எதிர்கொண்டுள்ளனா் அபேக்ஷா மருத்துவமனையில் தற்போதைக்கு மூன்று கதிரியக்க சிகிச்சை இயந்திரங்கள் உள்ளன.
எனினும் அவற்றைக் கொண்டு சிகிச்சை அளிப்பதற்கான வசதி உரிய முறையில் செய்து தரப்படவில்லை, தமக்கான உரிய பணி ஒதுக்கீடு நடைபெறவில்லை போன்ற காரணங்களை முன்வைத்து கதிரியக்க தொழில்நுட்பவியலாளர்கள் கடந்த நாட்களில் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டிருந்தனர்.
இந்நிலையில் மருத்துவமனைப் பணிப்பாளருடன் கலந்துரையாடல் மேற்கொண்டதை அடுத்து அவர்களின் வேலைநிறுத்தம் முடிவுக்கு வந்துள்ளது.
உயிராபத்தை எதிர்கொள்ளும் நிலை
எனினும், நாளாந்தம் சுமார் நூற்றி ஐம்பது நோயாளிகள் கதிரியக்க சிகிச்சை பெறுவதற்காக மருத்துவர்களினால் பரிந்துரைக்கப்பட்ட போதிலும் அறுபது வரையான நோயாளிகளுக்கு மாத்திரமே கதிரியக்க சிகிச்சை அளிக்கப்படுவதாக மருத்துவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
அதன் காரணமாக சிகிச்சை மூலம் குணப்படுத்தக் கூடிய நோயாளிகள் அதற்குப் பதிலாக பெரும் உயிராபத்தை எதிர்கொள்ளும் நிலை ஏற்பட்டுள்ளதாக அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
கதிரியக்க தொழில்நுட்பவியலாளர்களின் இந்த அசமந்த போக்கு குறித்து இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
இது தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்ள அடுத்த வாரம் ஆணைக்குழுவுக்கு சமூகமளிக்குமாறு கதிரியக்க தொழில்நுட்பவியலாளர்களுக்கு ஆணைக்குழு அறிவித்தல் அனுப்பியுள்ளது.