கறுப்பு ஜூலையில் பாதிக்கப்பட்டோருக்கு கனேடிய பிரதமர் இரங்கல்!
கறுப்பு ஜூலை கலவரத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு கனேடிய பிரதமர் ஜஸ்ரின் ட்ரூடோ தனது இரங்கலை வெளியிட்டுள்ளார்.
கறுப்பு ஜூலை கலவரம் இடம்பெற்று 38 ஆண்டுகள் பூர்த்தியாவதனை முன்னிட்டு வெளியிட்டுள்ள விசேட அறிக்கையில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
இலங்கையில் கறுப்பு ஜூலை கலவரத்தில் பாதிக்கப்பட்டவர்களை நினைவு கூர்வதில் உலகெங்கிலும் வாழும் தமிழர்களும் நாமும் இணைந்து கொள்கின்றோம் என தெரிவித்துள்ளார்.
கனடாவின் அபிவிருத்தியில் தமிழர்களின் பங்களிப்பு போற்றத்தக்கது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். கனேடிய அரசாங்கத்தின் சார்பில் கலவரத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினர் மற்றும் பாதிக்கப்பட்டோருக்கு இரங்கல்களை தெரிவித்துக் கொள்வதாக பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.
ஆயுத போராட்டம் நிறைவுக்குக் கொண்டு வரப்பட்ட போதிலும் நிரந்தரமான சமாதானத்தையும் நல்லிணக்கத்தையும் ஏற்படுத்துவதற்கு தொடர்ந்தும் நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டுமென வலியுறுத்தியுள்ளார்.
அர்த்தமுள்ள பொறுப்பு கூறல் செயன்முறையொன்று அவசியம் எனவும், பாதிக்கப்பட்ட அனைவர் மத்தியிலும் நம்பிக்கையை கட்டியெழுப்ப வேண்டுமெனவும் அவர் தெரிவித்துள்ளார்.
இந்த இலக்குகளை எட்டுவதற்கு கனடா தொடர்ந்தும் ஒத்துழைப்பு வழங்கும் என கனேடிய பிரதமர் தெரிவித்துள்ளார்.