ராஜபக்ச சகோதரர்களுக்கு கனடா அரசாங்கத்தால் விதிக்கப்பட்டுள்ள அதிரடித் தடைகள்
2009ஆம் ஆண்டு ஜனாதிபதியாகவும், பாதுகாப்பு அமைச்சராகவும் இருந்த மகிந்த ராஜபக்ச மற்றும் பாதுகாப்புச் செயலாளராக இருந்த அவரது சகோதரர் கோட்டாபய ராஜபக்ச ஆகியோருக்கு எதிராக கனடா அரசாங்கம் தடைகளை விதித்துள்ளது.
இதனை வெளிவிவகார அமைச்சர் மெலனி ஜோலி இன்று (10.01.2023) அறிவித்துள்ளார்.
மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டதற்காக இவர்கள் மீது கனடா அரசாங்கம் தடைகளை விதித்துள்ளது.
As part of a historic decision, Minister @melaniejoly, has announced that ?? has imposed sanctions on the Rajapaksa brothers, along with two other state officials for their involvement in gross human rights violations in #SriLanka.
— Gary Anandasangaree (@gary_srp) January 10, 2023
? Full announcement: https://t.co/vlQlkLPELU https://t.co/Yzo9B8tvty pic.twitter.com/Efr03drmT3
பொறுப்புக்கூறலுக்கான முக்கிய நகர்வு
மேலும் அதே காலகட்டத்தில், ராஜபக்ச சகோதரர்களுக்கு மேலதிகமாக, இன்று விதிக்கப்பட்ட தடைகளில் இலங்கை இராணுவப் படைப் பிரிவின் அதிகாரி சுனில் ரத்நாயக்க மற்றும் கடற்படைப் புலனாய்வு அதிகாரி லெப்டினன்ட் கமாண்டர் சந்தன பிரசாத் ஹெட்டியாராச்சி ஆகியோர் அடங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நான்கு இலங்கை அரசாங்க அதிகாரிகளுக்கு எதிராக கனடா அரசாங்கம் விதித்துள்ள தடைகள், இலங்கையில் பொறுப்புக்கூறலுக்கான முக்கியமான அடுத்த படியாகும் என தெரிவித்துள்ளார்.
சிறப்புப் பொருளாதார ஏற்பாடுகள் சட்டத்தின் விதிகள் தடை விதிக்கப்படுவோருடனான வணிக தொடர்புகளை தடை செய்வதால், கனடாவில் இருக்கக்கூடிய அவர்களது சொத்துக்கள் உறைநிலையில் வைக்கப்படுவதுடன், குடிவரவு மற்றும் அகதிகள் பாதுகாப்புச் சட்டப்படி அவர்கள் கனடாவுக்குள் அனுமதிக்கப்படுவதும் தடுக்கப்படுகிறது.
வெளியுறவு அமைச்சர் மெலனி ஜொலி இலங்கையில் 1983 ஆம் ஆண்டுக்கும் 2009 ஆம் ஆண்டுக்கும் இடையில் இடம்பெற்ற ஆயுதப் போரின்போது புரியப்பட்ட பாரதூரமானவையும், கட்டமைக்கப்பட்டவையுமான மனித உரிமை மீறல்களுக்குப் பொறுப்பான நான்கு இலங்கை அரச அதிகாரிகள் மீது சிறப்புப் பொருளாதார ஏற்பாடுகள் சட்டத்திற்கு அமைவாகக் கனடா தடைகளை விதிக்கிறதென இன்று அறிவித்தார்.
கனடாவும், சர்வதேச சமூகமும் பொறுப்புக்கூறல் தொடர்பாக நடவடிக்கை எடுக்குமாறு தொடர்ந்து கோரிவந்தாலும், இலங்கை அரசு அதன் மனித உரிமைக் கடப்பாடுகளை நிறைவேற்றுவதற்கு அர்த்தமுள்ளதும், உறுதியானதுமான நடவடிக்கைகளைக் குறைந்த அளவில் மட்டுமே எடுத்துள்ளது.
பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிதி வழங்குவதில் முன்னேற்றத்தையும், அமைதி, மீளிணக்கம் ஆகியவற்றுக்கான சந்தர்ப்பத்தையும் இது பாதிக்கிறது.
பாரதூரமான மனித உரிமை மீறல்களால் பாதிக்கப்பட்டோரும், தப்பிப் பிழைத்தோரும்
நிதிக்கு உரிமையுள்ளவர்கள். இதனால்தான் அர்த்தமுள்ள பொறுப்புப்கூறல்
நடைமுறையை உருவாக்குவது தொடர்பான அதன் உறுதிமொழியை
நிறைவேற்றுமாறு கனடா இலங்கையைத் தொடர்ந்து கோரிவருகிறது.
இலங்கையில் பாரதூரமான மனித உரிமை மீறல்களைப் புரிந்தோர் தண்டிக்கப்படாத நிலைமை தொடர்வதைக் கனடா ஏற்றுக்கொள்ள மாட்டாதென்ற தெளிவான செய்தியை இந்தத் தடைகள் வெளிப்படுத்துகின்றன.
இலங்கையில் பாதுகாப்பானதும், அமைதியானதும், அனைவரையும் உள்வாங்கிய எதிர்காலத்திற்கும் முக்கியமான ஒரு படியாகிய மனித உரிமைகள், பொறுப்புக்கூறல் என்பவற்றுக்காகக் கனடா, தொடர்புடைய பன்னாட்டு அமைப்புகள் ஊடாகவும் சர்வதேச பங்காளிகளுடன் சேர்ந்தும் கனடா தொடர்ந்து செயலாற்றும்.
மூன்று மில்லியன் டொலர் உதவி
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் இலங்கை குறித்த மையக் குழுவின் உறுப்பினரான கனடா, 51/1 தீர்மானம் முழுமையாக நடைமுறைப்படுத்தப்படுவதற்கு குரல் கொடுப்பதுடன், இலங்கைத் தீவில் பொறுப்புக்கூறலையும், அமைதியையும் ஏற்படுத்தும் முயற்சிகளுக்கும் குரல்கொடுக்கும்.
இலங்கை மக்கள் எதிர்கொள்ளும் இன்னல்களைத் தணிப்பதற்கு அவசரமாக அரசியல் மற்றும் பொருளாதார சீர்திருத்தங்களைச் செய்வதைக் கனடா ஆதரிக்கிறது.
இலங்கை அரசு இந்த நெருக்கடியைத் தீர்ப்பதற்கு நடவடிக்கை எடுக்கும்போது ஜனநாயகம், மனித உரிமைகள் ஆகியவற்றை மேம்படுத்தி, சட்டத்தின் ஆட்சியைப் பேணவேண்டுமென நாம் வலியுறுத்திக் கேட்கிறோம்.
இன்றைய அறிவிப்புக்கு மேலதிகமாக, இலங்கையின் மனிதாபிமான நெருக்கடி நிலையால், உணவுப் பாதுகாப்பு, வாழ்வாதாரம், வதிவிடம், உணவு தவிர்ந்த பொருட்கள், நலிவடைந்த சிறுவர்கள் மற்றும் பெண்களுக்கு ஊட்டச்சத்து உதவி, ஆரம்ப சுகாதார சேவைகள் போன்றன உள்ளடங்கிய உடனடித் தேவைகள் தொடர்பாக நடவடிக்கை எடுக்க உதவி வழங்குமாறு ஐக்கிய நாடுகள் அமைப்பும், செஞ்சிலுவை மற்றும் செம்பிறைச் சங்கங்களின் சர்வதேச சம்மேளனமும் விடுத்த கோரிக்கைகளுக்கு அமைவாக மூன்று மில்லியன் டொலரை வழங்குவதாகக் கனடா அறிவித்தது.
அத்துடன், அவசர தேவைகளை நிவர்த்தி செய்வதற்கு உதவியாக
ஏற்கனவே செயற்படுத்தப்படும் சர்வதேச உதவித் திட்டங்களில் மாற்றங்களைச்
செய்த கனடா, உதாரணமாக, உலக சுகாதார அமைப்பு அத்தியாவசிய மருத்துவ
உபகரணங்களையும், பொருட்களையும் பெற்றுக்கொள்ள உதவியளிப்பது போன்ற
நடவடிக்கைகளை எடுத்துள்ளது.







