பாலஸ்தீன அரசை அங்கீகரிப்பது தொடர்பில் கனடாவின் முடிவு
கடந்த வாரம், ஜி7 நாடுகளிலிருந்து முதன்முறையாக பிரான்ஸ் (பாலஸ்தீனிய) மாநிலத்தை அங்கீகரிக்கும் முடிவை அறிவித்தது.
அடுத்து அயர்லாந்து, ஸ்பெயின் மற்றும் நோர்வே ஆகிய நாடுகள் கடந்த ஆண்டே இதனை அதிகாரபூர்வமாக அங்கீகரித்திருந்தன.
பிரதமர் மார்க் கார்னி
இந்தநிலையில், பாலஸ்தீன அரசை வரும் செப்டம்பர் மாதம் அதிகாரப்பூர்வமாக அங்கீகரிக்க கனடா திட்டமிட்டுள்ளதாக பிரதமர் மார்க் கார்னி நேற்றையதினம்(30) அறிவித்துள்ளார்.
அண்மைய நாட்களில் இத்தகைய திட்டத்தை அறிவிக்கும் மூன்றாவது G7 நாடாக கனடா திகழ்கிறது.
இந்த அங்கீகாரம், பாலஸ்தீன அதிகாரத்திற்குள் ஜனநாயக சீர்திருத்தங்கள் மேற்கொள்வதைப் பொறுத்தது என்று மார்க் கார்னி தெளிவுபடுத்தியுள்ளார்.
குறிப்பாக, அடுத்த ஆண்டு ஹமாஸின் ஈடுபாடு இல்லாமல் தேர்தல்கள் நடைபெற வேண்டியதன் அவசியத்தை அவர் வலியுறுத்தினார்.
பாலஸ்தீன அரசின் அங்கீகாரம்
கனடாவின் இந்த அறிவிப்பு, மற்ற G7 உறுப்பு நாடுகளின் ஒத்த அறிக்கைகளைத் தொடர்ந்து வந்துள்ளது.
நேற்று முன்தினம், ஐக்கிய இராச்சியம் இஸ்ரேல் போர் நிறுத்தத்திற்கு ஒப்புக்கொண்டு பிற நிபந்தனைகளை பூர்த்தி செய்யாவிட்டால் செப்டம்பர் மாதத்தில் பாலஸ்தீன அரசை அங்கீகரிக்கும் என்று குறிப்பிட்டது.
உலகளவில், பாலஸ்தீன அரசின் முறையான அங்கீகாரம் பரவலாக உள்ளது. ஐ.நா.வின் 193 உறுப்பு நாடுகளில் கிட்டத்தட்ட 150 நாடுகள் ஏற்கனவே பாலஸ்தீன அரசை அங்கீகரித்துள்ளன.
நெதன்யாகு எச்சரிக்கை
இந்தநிலையில் செப்டம்பர் மாதம் நடைபெறும் ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் சபையில் காசாவில் போர் நிறுத்தத்திற்கு இஸ்ரேல் முன்வரவில்லை என்றால், பாலஸ்தீனம் தனி நாடாக அங்கீகரிக்கப்படும் என்று பிரித்தானிய பிரதமர் கெய்ர் ஸ்டார்மர் எச்சரித்துள்ளார்.
தங்கள் எல்லையில் உள்ள பிரதேசத்தை ஒரு நாடாக அங்கீகரிப்பது எதிர்காலத்தில் பிரித்தானியாவிற்கு அச்சுறுத்தலாக அமையும் என்று இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு எச்சரித்துள்ளார்.
பயங்கரவாதிகளை திருப்திப்படுத்துவது பலனளிக்காது என்றும், பிரித்தானியாவிலும் அதுவே நடக்கும் என்றும் அவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.



