கோவிட் விடயத்தில் செல்வந்த நாடுகள் போல் இலங்கையில் செயற்பட முடியாது! மஹிந்த
செல்வந்த நாடுகளினால் பின்பற்றப்பட்டு வரும் கோவிட் கட்டுப்பாட்டு முறையை இலங்கையில் அமுல்படுத்த முடியாது என பிரதமர் மஹிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
ஞாயிறு பத்திரிகை ஒன்றுக்கு வழங்கிய நேர்காணலில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
கோவிட் பெருந்தொற்றை கட்டுப்படுத்துவதில் சில செல்வந்த நாடுகள் முன்னெடுக்கும் திட்டங்கள் இலங்கைக்கு பொருத்தமுடையதல்ல என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
கோவிட் பெருந்தொற்றை கட்டுப்படுத்துவதற்கு நாட்டை முடக்குமாறு பல்வேறு தரப்பினரும் விடுத்து வரும் கோரிக்கைகள் குறித்து அவர் இவ்வாறு பதிலளித்துள்ளார்.
நாட்டை முடக்கினாலும் மாதாந்த சம்பளம் பெறுவோர் சம்பளம் பெற்றுக் கொள்வார்கள் எனினும் நாளாந்த கூலித் தொழில்களில் ஈடுபடுவோர் பாதிக்கப்படுகின்றனர் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
கூலித் தொழிலாளிகள் எதிர்நோக்கி வரும் பிரச்சினைகளுக்காக யாரும் குரல் கொடுப்பதில்லை என அவர் தெரிவித்துள்ளார்.
சுகாதார வழிமுறைகளை பின்பற்றுவதன் மூலம் கோவிட் பெருந்தொற்றை கட்டுப்படுத்த முடியும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.