இலங்கையில் போர்க்குற்றங்களில் ஈடுபட்டவர்களுக்கு பகிரங்கமாக தடை விதிக்குமாறு பிரச்சாரம்
இலங்கையில் இனவழிப்பு, மனித குலத்திற்கு எதிரான குற்றம் மற்றும் போர்க்குற்றங்களில் ஈடுபட்ட போர்க் குற்றவாளிகளுக்கு எதிரான பிரச்சாரமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இலங்கையின் 74வது சுதந்திர தினம் தமிழ் மக்களின் ஒரு துக்க தினமாகும்.
இலங்கையில் மனித குலத்திற்கு எதிரான பாரிய குற்றங்களில் ஈடுபட்டவர்களுக்கு எதிராக 04 பெப்ரவரி 2022, அன்று உலகளாவிய புலம்பெயர் தமிழ் அமைப்புகளால் மனித குலத்திற்கு எதிரான பாரிய குற்றங்களில் ஈடுபட்டார்கள் என்று நம்பத்தகுந்த குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் இனம் காணப்பட்ட நபர்கள் மீது பகிரங்க தடை விதிக்க கோரி பிரச்சாரத்தை தொடங்குகின்றனர்.
பிரச்சாரம் பற்றி
இலங்கை அரச இயந்திரத்தினால் தமிழ் மக்கள் மீது நடத்தப்பட்ட மனிதகுலத்திற்கு எதிரான பாரிய குற்றங்களினால் இலங்கையிலிருந்து வெளியேறிய பத்து லட்சத்துக்கும் அதிகமான தமிழ் மக்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் உலகளாவிய புலம்பெயர் தமிழ் அமைப்புக்கள் இணைந்து இந்த மனுவில் கையொப்பமிட்டு, தங்கள் நாடுகளின் அரசாங்கங்களை நம்பத்தகுந்த சாட்சியங்களை ஆதரமாகக் கொண்டு 16 செப்டம்பர் 2015 அன்று வெளியிடப்பட்ட இலங்கை மீதான ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர் அலுவலக (OHCHR) விசாரணையின் (OISL) அறிக்கையின்படி அதில் பெயர் குறிப்பிடப்பட்ட நபர்களை பகிரங்க தடை செய்ய கோரும் நடவடிக்கை.
இந்த அறிக்கை (OISL) குறிப்பாக 2008-2009 போரின் முடிவில் பாரிய மனிதகுலத்திற்கு எதிரான குற்றங்களைச் செய்ததற்காக கட்டளைப் பொறுப்பைக் கொண்டிருந்த பதினெட்டு இலங்கை அதிகாரிகளையும் தலைவர்களையும் அடையாளம் கண்டுள்ளது.
பிரச்சார நோக்கம்
இந்த அறிக்கையில் (OISL) ஆதாரபூர்வமாக சுட்டிக்காட்டப்பட்ட உண்மையின் அடிப்படையிலும், UNHRC தீர்மானம் 46/1 வெற்றிகரமாக நிறைவேற்றப்பட்டமை கொடுத்த ஊக்கத்தின் அடிப்படையிலும், அந்தந்த நாடுகளை பின்வரும் விடயங்களை நடைமுறைப்படுத்த வலியுறுத்துவதை நோக்கமாகக் கொண்டு இப்பிரச்சாரம் அமைந்துள்ளது.
● 16 செப்டம்பர் 2015ல் இடம்பெற்ற இலங்கை மீதான OHCHR விசாரணை அறிக்கையில் (OISL) பட்டியலிடப்பட்டுள்ள நம்பத் தகுந்ததாகக் கூறப்படும் 18 போர்க் குற்றவாளிகளுக்கு பகிரங்கத் தடை விதித்தல்.
● இந்த 18 நபர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினர் மீது பயணத் தடை மற்றும் சொத்து முடக்கம் ஆகியவற்றை நடைமுறைப்படுத்துதல்.
● உலகளாவிய நியாயாதிக்கம் (Universal Jurisdiction) வழிகளைப் பயன்படுத்தி இந்தப் போர்க் குற்றவாளிகளுக்கு தக்க தண்டனையை உறுப்பு நாடுகளின் நீதித்துறை செயல்முறையின் மூலம் பெற்றுத்தரல்.
எதிர்பார்க்கின்ற பெறுபேறுகள்
பிரேசில், கனடா, அமெரிக்கா (U.S.A), பிரித்தானியா (U.K) மற்றும் ஐரோப்பாவில் உள்ள சில நாடுகள், மனிதகுலத்திற்கு எதிரான பாரிய குற்றங்களில் ஈடுபட்டதாக நம்பத் தகுந்த வகையில் குற்றம் சாட்டப்பட்ட சில தேர்ந்தெடுக்கப்பட்ட இலங்கை போர்க் குற்றவாளிகளை அந்தந்த நாடுகளுக்குள் நுழைவதை தடுத்தும் மற்றும் வெளியேற்றியும் வருகின்றன.
அண்மையில் அமெரிக்க இராஜாங்க திணைக்களம் இரண்டு இலங்கை இராணுவ அதிகாரிகள் மற்றும் அவர்களது குடும்பத்தினர் அமெரிக்காவிற்குள் நுழைவதற்கு பகிரங்கமாக தடை விதித்துள்ளது.
அதேபோன்று, 2020ஆம் ஆண்டு அமெரிக்க இராஜாங்கச் செயலர் மைக் பொம்பியோ தீவிரமான மற்றும் நம்பகமான ஆதாரங்களை மேற்கோள் காட்டி, தற்போதைய பாதுகாப்புப் படைத் தளபதியும், இலங்கை இராணுவத் தளபதியுமான சவேந்திர சில்வா, சட்டத்திற்குப் புறம்பான கொலைகள் மற்றும் மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டதன் காரணமாக, அமெரிக்காவுக்குள் நுழைவதற்குத் தகுதியற்றவர் என அறிவித்தார்.
ஜனநாயகம், சட்டத்தின் ஆட்சி மற்றும் மனித உரிமைகளை மதிக்கும் நாடுகள் மேலே பட்டியலிடப்பட்டுள்ள பிரச்சார நோக்கங்களை அடைய உதவ முன்வர வேண்டும் என்று இனப்படுகொலையால் பாதிக்கப்பட்ட தமிழ் மக்கள் எதிர்பார்க்கின்றனர்.
பிரச்சார மனு
1948 இல் பிரித்தானியர்களிடம் இருந்து சுதந்திரம் பெற்றதில் இருந்து அடுத்தடுத்து வந்த இலங்கை அரசாங்கங்களால் இனப்படுகொலை நோக்கத்துடன் கொடூரமான ஒடுக்குமுறையால் பாதிக்கப்பட்ட தமிழ் மக்களுக்குப் பரிகார நீதி கிடைப்பதற்கு, புலம்பெயர் தமிழ் மக்கள் வாழும் நாடுகள், ஐ.நா, ஐ.நாவின் உறுப்பு நாடுகள், சர்வதேச அரசு சாரா நிறுவனங்கள், பொதுமக்கள் மற்றும் ஊடகங்கள் ஆகிய அனைவரையும் ஆதரவளிக்குமாறு கேட்டுக் கொள்கிறோம். இலங்கையின் 74வது சுதந்திர தினமான 04 பெப்ரவரி 2022 அன்று உத்தியோகபூர்வமாக ஆரம்பிக்கப்பட்ட “இலங்கைப் போர்க் குற்றவாளிகள் மீதான பகிரங்க தடை” பிரச்சாரத்தில் இணையுமாறு உலகத் தமிழ் அமைப்புகளையும், உண்மை, மனித உரிமைகள் மற்றும் நீதியை நிலைநாட்டும் பிற நிறுவனங்களையும் இருகரம் நீட்டி அழைக்கிறோம்.
இலங்கை மீதான OHCHR விசாரணை அறிக்கையில் (OISL) பட்டியலிடப்பட்டுள்ள நம்பத்தகுந்த குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் போர்க் குற்றவாளிகள் என பட்டியல் இடப்பட்ட பெயர் விபரம்.
1. மஹிந்த ராஜபக்ஷ - பிரதமர், அப்போதைய ஜனாதிபதி மற்றும் ஆயுதப் படைகளின் தலைமைத் தளபதி
2. கோட்டாபய ராஜபக்ச - ஜனாதிபதி, முன்னாள் பாதுகாப்பு செயலாளர்
3. ஜெனரல் சரத் பொன்சேகா
4. லெப்டினன்ட் ஜெனரல் சவேந்திர சில்வா
5. மேஜர் ஜெனரல் சத்தியப்பிரிய லியனகே
6. மேஜர் ஜெனரல் கமல் குணரத்ன
7. மேஜர் ஜெனரல் மஹிந்த ஹத்துருசிங்க
8. மேஜர் ஜெனரல் நந்த மல்லவாராச்சி
9. மேஜர் ஜெனரல் ஜகத் டயஸ்
10. மேஜர் ஜெனரல் ஜகத் ஜயசூரிய
11. பிரிகேடியர் பிரசன்ன சில்வா
12. பிரிகேடியர் நந்தன உடவத்த
13. பிரிகேடியர் சாகி கல்லகே
14. கேணல் ஜி.வி. ரவிப்ரியா
15. அட்மிரல் வசந்த குமார் ஜயதேவ கரன்னாகொட
16. அட்மிரல் திசர எஸ்.ஜி.சமரசிங்க
17. அட்மிரல் திஸாநாயக்க விஜேசிங்க ஆராச்சிலாகே சோமதிலகே திஸாநாயக்க
18. சி.என்.வகிஷ்டா