மட்டக்களப்பில் சைவ ஆலயத்திற்கு சொந்தமான காணியை சட்டவிரோதமாக அபகரித்த நபர்
மட்டக்களப்பு (Batticaloa) - மட்டிக்கழி கடற்கரைப்பகுதியிலுள்ள ஆலயத்தின் காணியை மீன் வியாபாரி ஒருவர் சட்டவிரோதமாக அபகரித்து வாடி அமைத்துள்ள நிலையில் அப்பகுதி பொது அமைப்புக்களால் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
மட்டிக்கழி அறநெறி பாடசாலை ஒன்றின் கட்டிடத்தில் ஆலய பரிபாலன சபை மற்றும் பொது அமைப்புக்கள் ஒன்றிணைந்து நேற்று (02.06.2024) நடாத்திய ஊடக மாநாட்டின் போதே இவ்வாறு எச்சரித்துள்ளனர்.
குறித்த நபர், மட்டிக்கழி ஸ்ரீ திரௌபதாதேவி ஆலய தீ மிதிப்பின் போது மஞ்சள் குளிப்பதற்காக அமைக்கப்பட்டுள்ள அம்மன் பீடத்தை சுற்றியுள்ள காணியை சட்டவிரோதமாக அபகரித்து வாடி அமைத்துள்ளார்.
வழங்கப்பட்டுள்ள அனுமதி
இந்நிலையில், அதற்கு அதிகரிகளும் உடந்தையாக செயற்படுவதாகவும் அதனை வன்மையாக கண்டிப்பதுடன் உடன் அகற்றாவிடில் மாநகர சபையை இந்து மக்கள் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தவுள்ளதாகவும் அப்பகுதி பொது அமைப்புக்கள் தெரிவித்துள்ளன.
அதேவேளை, இந்த காணியில் குறித்த மீன் வியாபரிக்கு மீன்வாடி அமைப்பதற்காக குத்தகைப்பணமாக ஒரு இலட்சத்து 50ஆயிரம் ரூபா பணத்தை மட்டு மாநகர சபை ஆணையாளர் பெற்று உடன்படிக்கை மூலம் அனுமதியளித்துள்ளார் என பொது அமைப்புக்கள் குற்றம் சுமத்தியுள்ளன.
இதனை தொடர்ந்து, அவர் அந்த பகுதியை அபகரித்து மீன் வாடி அமைக்கும் செயற்பாட்டில் ஈடுபட்டு வருகின்றார்.
மேலும், இது தொடர்பாக ஆலய பரிபாலன சபை, கிராம அபிவிருத்தி சங்கம், பாடசாலை அபிவிருத்தி சங்கம் உள்ளிட்ட பொது அமைப்புக்கள் இந்து மதத்தை இழிவுபடுத்தும் வகையிலான இந்த செயற்பாட்டை கண்டித்து அரசாங்க அதிபர், பிரதேச செயலாளர், மாநகரசபை ஆணையாளர் உள்ளிட்டவர்களுக்கு கடிதம் மூலமாகவும் நேரடியாகவும் முறையிட்டுள்ளனர்.
முன்னெடுக்கவுள்ள போராட்டம்
இதன் பின்னர், மாவட்ட அபிவிருத்தி குழு கூட்டத்திலும் இது தொடர்பாக முறைப்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
இருப்பினும், அதற்கான தீர்வை பெற்று தருவதாக தெரிவித்த போதும் எதுவிதமான தீர்வும் கிடைக்காத நிலையில் பிரதேச செயலாளருக்கு கீழ் உள்ள இந்த அரச காணியில் பிரதேச செயலாளரின் அனுமதியின்றி எவ்வாறு மாநகரசபை மீன்வாடி அமைக்க அனுமதி வழங்க முடியும் எனவும் பொது மக்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.
அதேவேளை, குறித்த சட்டவிரோதமான செயலுக்கு உறுதுணையாக சில அரச அதிகாரிகளும் செயற்படுவரும் நிலையில் சட்டவிரோதமாக அமைக்கபட்டு வரும் இந்த மீன் வாடி உடனடியாக அகற்றப்படாவிடில் இந்து மக்களை அணிதிரட்டி மாநகர சபையினை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக பொது அமைப்புக்கள் எச்சரித்துள்ளனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |