கிளிநொச்சியில் ஆசிரியருக்கு பயங்கரவாத தடுப்புப்பிரிவு விசாரணைக்கு அழைப்பு
கிளிநொச்சியிலுள்ள அரச பாடசாலை ஒன்றில் ஆசிரியராக சேவையாற்றும் சின்னராசா சிவேந்திரன் என்பவரை பயங்கரவாத குற்றத்தடுப்பு பிரிவால் கொழும்பு 2ஆம் மாடிக்கு விசாரணைக்கு வருமாறு அழைப்பாணை அனுப்பப்பட்டுள்ளது.
இது தொடர்பில் குறித்த ஆசிரியர், குற்றம் எதனையும் செய்யாத தன்னை பயங்கரவாத குற்றத்தடுப்புப் பரிவு 2ஆம் மாடிக்கு விசாரணைக்கு அழைத்தமை தனது இயல்பு வாழ்க்கைக்கு அச்சுறுத்தலாக அமைவதாக கூறியும், தற்போதைய கோவிட் வைரஸ் அபாயமான காலகட்டத்தில் தன்னை தென்னிலங்கைக்கு விசாரணைக்கு அழைத்தமை சுகாதாரப் பிரச்சினைகளைத் தோற்றுவிக்கும் எனவும் சுட்டிக்காட்டி இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு பதிவு செய்துள்ளார்.
ஆசிரியரால் செய்யப்பட்ட முறைப்பாட்டில்,
சின்னராசா சிவேந்திரன் ஆகிய நான் எவ்வித குற்றச்செயல்களிலும் ஈடுபடாத நிலையில் ஓர் ஆசிரியராக கடமையாற்றி வரும் என்னை பயங்கரவாத குற்றத்தடுப்புப் பிரிவுப் பொலிஸார் தமது தலைமைக் காரியாலயம் அமைந்துள்ள 2ஆம் மாடி கொழும்புக்கு விசாரணைக்கு வருகை தருமாறு அழைப்பு அனுப்பியுள்ளமையானது எனது இயல்பு வாழ்க்கையைக் குழப்பும் அச்சுறுத்தலாக அமைகின்றது.
கடந்த கால யுத்தத்தின் இறுதியில் எனது சகோதரனான சின்னராசா சிவரஞ்சன் என்பவரும் காணாமல் ஆக்கப்பட்ட நிலையில் அவரை இன்றுவரை நாம் தேடி வரும் இவ்வேளையில் குற்றம் ஏதும் செய்யாது ஓர் ஆசிரியராக கற்பித்தல் பணியில் ஈடுபட்டு வரும் எனக்கும் அச்சுறுத்தல் விடுப்பதாகவும் எனது இயல்பு வாழ்க்கையைக் குழப்பும் செயற்பாடாகவுமே இது அமைந்து காணப்படுகின்றது.
இது பற்றி மேலும், கடந்த 27.02.2021 அன்றைய தினம் நான் வீட்டில் இல்லாத போது, எனது வீட்டிற்கு வருகை தந்த பயங்கரவாத குற்றத் தடுப்புப் பிரிவினர் எனது தாயாரிடம் என்னை 04.03.2021ஆம் திகதி காலை 9 மணிக்கு பயங்கரவாத தடுப்புப்பரிவு பொலிஸ் தலைமைக் காரியாலயம் புதிய செயலாளர் கட்டடம் 2ஆம் மாடி கொழும்பு - 1 எனுமிடத்திற்கு விசாரணைக்கு வருகை தருமாறு அழைப்புக் கடிதத்தை வழங்கிச் சென்றனர்.
இதனை அறிந்து அக்கடிதத்துடன் கிளிநொச்சியிலுள்ள பயங்கரவாத குற்றத்தடுப்புப் பிரிவினரிடம் சென்று அவ்வழைப்பு கடிதத்தைக் காண்பித்து அதுகுறித்து கேட்ட போது, இது குறித்து தமக்கு எதுவும் தெரியாது எனவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ள இடத்திற்கே செல்லுமாறு அவர்கள் கூறினார்கள்.
அப்போது நான் க.பொ.த. சாதாரண தரப் பரீட்சைக் கடமையில் ஈடுபட்டிருந்தமை தொடர்பிலும் பரீட்சை கடமையை விட்டுக் குறிப்பிட்ட தினத்தில் செல்ல முடியாது என்பதை கூறியதுடன், தற்போதைய கோவிட் (Covid-19) நிலைமையை சுட்டிக்காட்டி கிளிநொச்சியில் விசாரணை நடத்துமாறு கோரினேன்.
இங்கு விசாரிக்க முடியாது எனவும் கொழும்புக்குத்தான் விசாரணைக்குச் செல்ல வேண்டும் எனவும் பரீட்சைக் கடமையில் ஈடுபடுவதால் குறித்த தினத்தை விடப் பிறிதொரு தினம் பின்னர் அறிவிக்கப்படும் எனக் கூறியவர்கள்.
பின்னர் தொலைபேசியில் தொடர்புகொண்டு 18.03.2021ஆம் திகதி காலை 9 மணிக்கு பயங்கரவாத குற்றத் தடுப்புப் பிரிவு பொலிஸ் தலைமைக் காரியாலயம் 2ஆம் மாடி கொழும்பு - 1 என்னும் இடத்திற்கு விசாரணைக்கு வருமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.
500 இற்கும் மேற்பட்ட மாணவர்கள் கல்வி கற்கும் மற்றும் 30 இற்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் சேவையில் ஈடுபடும் கிளிநொச்சியிலுள்ள அரச பாடசாலை ஒன்றில் ஆசிரியராகச் சேவையாற்றி வரும் நான், கோவிட் வைரஸ் (Covid-19) பரவல், தாக்கம் அதிகரித்துக் காணப்படும் இவ்வேளையில் தென்னிலங்கைக்குப் பலரும் பயணிக்கும் வாகனங்களில் போக்குவரத்துச் செய்து விட்டு கடமைக்கு மீண்டும் செல்வதானது 500 இற்கும் மேற்பட்ட மாணவர்கள், ஆசிரியர்களின் சுகாதாரப் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாகவே காணப்படுகின்றது.
இதனால் கிளிநொச்சியில் விசாரிப்பதே பொருத்தமானது. மற்றும் குற்றம் ஏதும் செய்யாது ஓர் ஆசிரியராக மாணவர்களுக்குக் கற்பித்தல் பணியில் ஈடுபட்டு வரும் என்னைப் பயங்கரவாதக் குற்றத் தடுப்புப் பிரிவினர் 2ஆம் மாடி கொழும்புக்கு விசாரணைக்கு வருமாறு அழைப்பதானது எனது சுயகௌரவத்திற்கு இழுக்கு ஏற்படுத்துவதாக அமைவதுடன், எனது இயல்பு வாழ்க்கையைக் குழப்பும் அச்சுறுத்தலாகவே அமைந்து காணப்படுகின்றது என முறைப்பாட்டில் குறிப்பிட்டுள்ளார்.
