அஸ்வெசும தொடர்பான முறைப்பாடுகளை முன்வைத்து தீர்வுகளை பெறுவதற்கு புதிய வழி
'1924' என்ற இலக்கத்துக்கு வேலை நாட்களில் காலை 8.30 மணியிலிருந்து பி.ப. 4.30 மணிவரையில் தொடர்பு கொள்வதன் ஊடாக நலன்புரி நன்மைகள் சபையின் ஊடான அஸ்வெசும தொடர்பான முறைப்பாடுகளை எவரும் முன்வைத்து தீர்வுகளை மேற்கொள்ள முடியும் என நலன்புரி நன்மைகள் சபையின் ஆணையாளரும், சமூகப்பாதுகாப்புத் திட்டத்தின் தலைவருமான ஜயந்த விஜயரட்ண தெரிவித்துள்ளார்.
அத்துடன் அஸ்வெசும திட்டத்தின் நடைமுறையாக்கத்தில் ஏனைய மாகாணங்களை விட வடக்கு மாகாணமே சிறப்பாகச் செயற்படுகின்றது எனவும் பாராட்டியுள்ளார்.
விசேட கலந்துரையாடல்
வடக்கு மாகாண ஆளுநர் செயலகத்தில், வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் தலைமையில், வடக்கு மாகாணத்தின் அனைத்து மாவட்டச் செயலர்கள், அனைத்துப் பிரதேச செயலர்களுடனான விசேட கலந்துரையாடலொன்று இடம்பெற்றுள்ளது.
இதன் போது கருத்துத் தெரிவித்த பிரதித் திட்டப் பணிப்பாளர் எஸ்.யு.சந்திரகுமாரன்,
ஆளுநர் இங்குள்ள மக்களின் பிரச்சினை தொடர்பில் எம்முடன் மூன்று மாதங்களுக்கு முன்னரே கலந்துரையாடியிருந்தார். இங்கு எம்மை வருமாறு அழைத்திருந்தார்கள்.
இங்குள்ள பிரச்சினைகளை விரைந்து தீர்க்குமாறும் அவர் கோரியிருந்தார். அதற்கு அமைவாக நாங்கள் இங்கு வந்துள்ளோம். ஆளுநர் குறிப்பிட்டுள்ள மனுக்களை மீளாய்வு செய்வதற்குத் திட்டமிட்டுள்ளோம்.
அதனை எதிர்வரும் ஜூன் மாதத்துக்குள் நிறைவு செய்வதற்கு எதிர்பார்கின்றோம் என்று குறிப்பிட்டார்.
பிரச்சினைகள்
இதனைத்தொடர்ந்து நடைபெற்ற கலந்துரையாடலில், ஒவ்வொரு மாவட்டங்களினதும் மாவட்டச் செயலாளர்கள், பிரதேச செயலர்கள் பல்வேறு விடயங்களைச் சுட்டிக்காட்டினர்.
அஸ்வெசும திட்டத்தை நடைமுறைப்படுத்தும்போது எதிர்கொள்ளும் சவால்கள் தொடர்பாகவும் தெரியப்படுத்தினர். வடக்கு மாகாணத்தில் மாத்திரம் உள்ள விசேட சிக்கல் நிலைமைகளையும் எடுத்துக்கூறினர்.
இதன்போது எதிர்காலத்தில் சில விடயங்களில் 'முறைமையில்' மாற்றங்களை ஏற்படுத்தவும், முன்வைக்கப்பட்ட கொள்கை ரீதியான பிரச்சினைகள் தொடர்பில் கொழும்பில் மீண்டும் ஆராய்வதற்கும் பிரதித் திட்டப் பணிப்பாளர் இணங்கியுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |





