பல்கலைக்கழக விரிவுரையாளர் வெற்றிடங்கள் தொடர்பில் அமைச்சரவையின் அனுமதி
இலங்கையிலுள்ள பல்கலைக்கழகங்கள் மற்றும் உயர் கல்வி நிறுவனங்களில் காணப்படும் விரிவுரையாளர் வெற்றிடங்களை நிரப்புவதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளதாகப் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுத் தலைவர் சிரேஷ்ட பேராசிரியர் சம்பத் அமரதுங்க தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், பல்கலைக்கழகங்கள், உயர்கல்வி நிறுவனங்களில் காணப்படும் விரிவுரையாளர்கள் மற்றும் கல்வி சார் பணியாளர் பற்றாக்குறை தொடர்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு கோரிக்கை
பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவினால் பிரதமரின் செயலாளருக்கு அனுப்பி வைக்கப்பட்ட கோரிக்கைக் கடிதங்களுக்கு அமைவாக, பிரதமரின் செயலாளர் தலைமையில் அமைச்சரவையினால் நியமிக்கப்பட்ட குழுவின் பரிந்துரைக்கேற்ப பல்கலைக்கழகங்கள் மற்றும் உயர் கல்வி நிறுவனங்களில் காணப்படும் விரிவுரையாளர் வெற்றிடங்களை நிரப்புவதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அமைச்சரவையின் அனுமதியின் படி, 2023 ஆம் ஆண்டின் வரவு செலவுத் திட்ட ஒதுக்கீட்டுக்கு உட்பட்டு எதிர்வரும் ஜூன் மாதம் முதலாம் திகதி வரை ஓய்வுபெறும் விரிவுரையாளர்களின் எண்ணிக்கைக்குச் சமமான விரிவுரையாளர்களை சேர்க்கவும்,
2023 ஆம் ஆண்டு பதவியில் இருந்து விலகும் அல்லது சேவை வறிதாக்குதலுக்கு உட்படுத்தப்படும் விரிவுரையாளர்களின் எண்ணிக்கைக்காக 2023 ஆம் ஆண்டுக்கென உத்தேசிக்கப்பட்ட ஆளணி ஒதுக்கீட்டுக்குச் சமனான விரிவுரையாளர்களை சேர்க்கவும் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவுக்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.
இதேநேரம், கடந்த வாரம் பல்கலைக்கழக ஆசிரியர் சங்கங்களின் சம்மேளனப்
பிரதிநிதிகளுக்கும், ஜனாதிபதிக்கும் இடையில் இடம்பெற்ற சந்திப்பின் போது
பல்கலைக்கழக ஆசிரியர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பில் முன்வைத்த
கோரிக்கைகளைக் கேட்ட ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க உடனடியாக அவற்றை
குறித்து கவனஞ் செலுத்துமாறு தனது அதிகாரிகளுக்குப் பணித்திருந்தமை
குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |