தமிழரசுக்கும் ஒற்றையாட்சிக்கும் எந்தவித சம்பந்தமும் கிடையாது! சி.வி.கே. தெரிவிப்பு
இலங்கைத் தமிழரசுக் கட்சி எந்தக் காலத்திலும் ஒற்றையாட்சியை ஏற்றது கிடையாது, ஒற்றையாட்சியை ஏற்றவர்கள் நாங்கள் அல்லர். தமிழரசுக் கட்சிக்கும் ஒற்றையாட்சிக்கும் எந்தச் சம்பந்தமும் கிடையாது என இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவரும், வட மாகாண அவைத் தலைவருமான சி.வி.கே.சிவஞானம் தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாணத்தில் நேற்று நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் இந்த விடயத்தை கூறியுள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், ஏக்கிய ராஜ்ஜிய, ஒற்றையாட்சி என்பவற்றை நாங்கள் ஏற்கப் போவதில்லை என்பதை ஏற்கனவே அறிவித்துவிட்டோம். அப்படியிருக்கத் திரும்பத் திரும்ப இவைகளைப் பற்றிப் பேசுவதில் எந்த அர்த்தமுமே கிடையாது.
உத்தியோகபூர்வ அறிவிப்பு
புதிய அரசமைப்பைக் கொண்டு வருவது தொடர்பாக இந்த அரசு உத்தியோகபூர்வமாக எதனையும் தெரிவிக்கவில்லை. ஆக அரசு உத்தியோகபூர்வமாக எதனையும் சொல்லுகின்ற போது இதைப் பற்றி பேசலாம். ஆனாலும் ஒற்றையாட்சியையும் ஏக்கிய ராஜ்ஜியவையும் ஏற்றுக் கொள்ள மாட்டோம்.

இதற்கு மேலேயும் எமக்கு எதிராகப் பிரசாரம் செய்வது ஓர் அரசியல் தந்திரோபாயமே தவிர அது யதார்த்தம் அல்ல. எங்களுடைய கட்சியின் கொள்கையும் தெளிவான நிலைப்பாடும் ஒற்றையாட்சியல்ல. அப்படியிருக்க எவ்வாறு நாங்கள் ஒற்றையாட்சியை ஏற்றுக்கொண்டதாகப் பிரச்சாரம் செய்ய முடியும்.? ஏக்கிய ராஜ்ஜிய என்றால் அது ஒற்றையாட்சி அல்ல.
அது ஒருமித்தது என்றுதான் வருகின்றது. எனினும், ஏக்கிய ராஜ்ஜிய, ஒருமித்தது என்ற இந்த விடயங்களில் தெளிவு இல்லை. ஆனாலும், அதை நாங்கள் ஏற்றுக்கொண்டதாகவும் இல்லை.
கூட்டாக ஒரு நிலைப்பாடு
எனினும், அதனடிப்படையில் சில விடயங்களைப் பரிசீலிக்கலாம் என இப்போதைய ஆட்சியாளர்கள் சொல்லியிருந்தனரே தவிர ஏக்கிய ராஜ்ஜியவைக் கொண்டு வருவதாக அவர்கள் சொன்னதும் கிடையாது.

ஆகையினால் இப்போது எங்களுக்கு எதிராக முன்வைக்கின்ற பிரச்சாரங்களை நாங்கள் மறுதலிக்கின்றோம். உண்மையில் அப்படியொரு புதிய அரசமைப்பு வருகின்ற போது நிச்சயமாக எல்லாக் கட்சிகளோடும் நாங்கள் கூட்டாக இணைந்து கூட்டாக ஒரு நிலைப்பாட்டை எடுப்போம் என்பதை உறுதியாகச் சொல்ல விரும்புகின்றேன்.
புதிய அரசமைப்பை இந்த அரசு முன்னெடுக்கின்ற போது நாங்கள் தனித்துக் கருத்துக் கூற இருந்தாலும் கூட அனைத்து தமிழ்த் தேசியக் கட்சிகளோடும் சேர்ந்து ஒருமித்த கருத்தை முன்வைப்பதற்கான சூழ்நிலையை ஏற்படுத்துவோம். அத்தகைய எண்ணம், சிந்தனை எங்களுக்கு உண்டு. அதற்மைய நடவடிக்கைகளை எடுப்போம். இது சம்பந்தமாக கட்சி ரீதியிலும் மத்திய செயற்குழுவிலும் பேசுவோம் என்றார்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW | 
 
    
     
    
     
    
     
    
     
        
    
     
                 
                 லங்காசிறி FM
                                லங்காசிறி FM
                             
                                             
         
     
     
     
 
 
 
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
        