மூன்று வழக்குகள் உள்ள நிலையில் உடைத்து அகற்றப்பட்ட வியாபாரம் நிலையம்
நீதிமன்றங்களில் மூன்று வழக்குகள் உள்ள நிலையில் தனது கடையினை கரைச்சி பிரதேச சபை உடைத்து அங்குள்ள பொருட்களையும் எடுத்துச் சென்றுள்ளனர் என கிளிநொச்சி பொதுச்சந்தையில் வாழ்வாதாரமாக ஊர்க் கோழிக் கடை வைத்து பல வருடங்களாக வியாபாரம் செய்து வருகின்றவர் கவலை தெரிவித்துள்ளார்.
மேலும் தெரிவிக்கையில்,
கரைச்சி பிரதேச சபையில் தற்போது ஆட்சி அதிகாரத்தில் உள்ள தரப்பினர் தன்னை அரசியல் ரீதியாக பழிவாங்கும் நோக்குடன் நடந்துகொள்கின்றனர்.
இவர்கள் அதிகாரத்திற்கு வந்த நாள் முதல் தொடர்ச்சியாக பல்வேறு பழிவாங்கலுக்குள் உள்ளாக்கப்பட்டு வருகின்றேன். எனது வியாபாரத்திறக்கான அனுமதி மறுக்கப்பட்டு வந்தது.
இதனை தொடர்ந்து அதற்கான கிளிநொச்சி நீதவான் நீதிமன்றலில் வழக்குத்தாக்கல் செய்து அதன் வழக்கு நடைப்பெற்று வருகிறது.
இதேவேளை ஏற்கனவே கரைச்சி பிரதேச சபையினரால் கிளிநொச்சி நீதவான் நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கில் தீர்ப்பு வழங்கப்பட்ட போது அந்த தீர்ப்புக்கு எதிராக நான் யாழ். மேல் நீதிமன்றில் மேன் முறையீட்டு வழக்கு தாக்கல் செய்துள்ளேன். அந்த வழக்கும் தற்போது நடைப்பெற்று வருகிறது.
அத்தோடு மேலும் ஒரு வழக்கு கிளிநொச்சி நீதவான் நீதிமன்றில் இடம்பெற்று வருகிறது. இந்த நிலையிலேயே எனது வியாபார நிலையத்தினை நான் இல்லா சந்தர்ப்பம் பார்த்து உடைத்து அங்குள்ள பொருட்களையும் ஏற்றிச் சென்றுள்ளனர் எனத் தெரிவித்தார்.
இது தொடர்பில் கரைச்சி பிரதேச சபையின் செயலாளருடன் தொடர்பு கொண்டு வினவிய போது குறித்த நபர் அனுமதி பெறாது வியாபாரம் நிலையம் அமைத்துள்ளதன் காரணத்தினால் குறித்த கடையினை உடைத்து அகற்றியதாக தெரிவித்தார்.



