பிரித்தானியாவில் கடும் நெருக்கடி! - பேருந்து சேவையும் பாதிப்பு
பிரித்தானியாவில் தற்போது ஏற்பட்டுள்ள எரிபொருள் நெருக்கடியால் பேருந்து சேவைகளில் தாமதம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, எரிபொருள் நிரப்பும் நிலையங்களுக்கு அருகில் போக்குவரத்தில் சிக்கிய பேருந்துகளால் பல வழிகள் பாதிக்கப்பட்டுள்ளதாக பேருந்து இயக்குநர்கள் கூறியுள்ளனர்.
எரிபொருள் நிரப்புவதற்காக வாகனங்கள் நீண்ட வரிசையில் காத்திருப்பதாகவும், சில சாரதிகள் எரிபொருள் நிரப்ப பல மணி நேரம் காத்திருப்பதாகவும் தெரிவிக்கப்படுகின்றன.
இது குறித்து Go-Ahead இன் செய்தி தொடர்பாளர் கருத்து வெளியிடுகையில்,
“எரிபொருள் நிலையங்களைச் சுற்றி ஏற்பட்டுள்ள போக்குவரத்து நெரிசல் காரணமாக சில சிறிய தாமதங்களைக் காணமுடிந்ததாக கூறியுள்ளார். எனினும், தமது பயணிகள் பேருந்து சேவைகளில் பெரும்பாலானவை வழக்கம் போல் இயங்குவதாகவும்” அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதனிடையே, எரிபொருள் நெருக்கடி காரணமாக தலைநகரில் ஒரு சில பேருந்து வழித்தடங்களும் தாமதத்தை சந்தித்து வருவதாக லண்டன் போக்குவரத்து செய்தி தொடர்பாளர் குறிப்பிட்டுள்ளார்.
எரிபொருள் பற்றாக்குறையின் மோசமான நிலை லண்டன், தென்கிழக்கு மற்றும் பிற நகரங்களில் இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்நிலையில், தற்போது ஏற்பட்டுள்ள இந்த எரிபொருள் தட்டுப்பாடு பிரச்சனையைப் தணிப்பதற்கு பிரித்தானிய அரசு, இராணுவ தரப்பை பயன்படுத்த வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இராணுவத்தில் பீரங்கி டாங்கிகளை இயக்கும் 150 ஓட்டுநர்கள் எரிபொருட்களை, பெட்ரோல் நிலையங்களுக்கு கொண்டு சேர்க்க உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
பிரித்தானியாவில், கடந்த சில நாட்களாக எரிபொருள் விநியோகம் பாதிக்கப்பட்டிருந்ததுடன், சில எரிபொருள் நிரப்பும் நிலையங்கள் மூடப்பட்டன. இதனால் எரிபொருளை பெற்றுக்கொள்வதற்காக மக்கள் நீண்ட வரிசையில் காத்திருக்க வேண்டியேற்பட்டது.
தொற்றுநோய் மற்றும் பிரெக்சிட் உள்ளிட்ட பல காரணிகளால் பிரித்தானியாவில் லாரி ஓட்டுநர்கள் பணியில் கடும் வெற்றிடங்கள் ஏற்பட்டுள்ளன. இதனால் தற்போது எரிபொருள் மற்றும் உணவு பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.
பிரித்தானியாவில் தற்போது ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலையை பூர்த்தி செய்ய வேண்டுமானால் சுமார் 100,000 ஓட்டுனர்கள் தேவை என அண்மையில் தகவல்கள் வெளியாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.