எரிபொருள் விலை குறைப்பினையடுத்து பேருந்து கட்டணம் தொடர்பாக வெளியாகியுள்ள அறிவிப்பு
எரிபொருள் விலை குறைந்த போதிலும் பேருந்து கட்டணத்தில் மாற்றம் இருக்காது என இலங்கையின் தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் (National Transport Commission) தலைவர் சசி வெல்கம தெரிவித்துள்ளார்.
கடந்த சில தினங்களில் எரிபொருளின் விலை இரண்டு தடவைகள் குறைக்கப்பட்ட போதிலும், அது முன்னைய விலையிலிருந்து 2.8 வீதத்தினாலேயே குறைவடைந்துள்ளது.
இந்நிலையில், பேருந்து கட்டணத்தை குறைப்பதற்கு குறைந்தது 4 வீதமாவது எரிபொருளின் விலை குறைவடைய வேண்டும் என சசி வெல்கம சுட்டிக்காட்டியுள்ளார்.
வருடாந்த பேருந்து கட்டணம்
அத்துடன், வருடாந்த பேருந்து கட்டணத்தை குறைக்கும் திட்டம் பேச்சுவார்த்தையில் இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
வருடாந்த பேருந்து கட்டண விலைகுறைப்பு வெறுமனே எரிபொருள் விலையில் மட்டுமே தங்கியிருக்காது பேருந்து உதிரிபாகங்கள் விலை உட்பட 12 காரணிகளில் தங்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
எவ்வாறாயினும், பேருந்து கட்டணத்தில் தற்போதைக்கு எந்தவொரு மாற்றமும் இருக்காது என சசி வெல்கம கூறியுள்ளார்.
இதேவேளை, வாகன உதிரிபாகங்களின் விலை அதிகரித்துள்ளதால் பாடசாலை போக்குவரத்து கட்டணங்கள் குறைக்கப்படாது என அகில இலங்கை பாடசாலை போக்குவரத்து வான் உரிமையாளர்கள் சங்கம் (All Ceylon School Transport Vans Owners Association) தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |