கிராமிய பொருளாதாரத்தை நோக்காக கொண்டு உருவாக்கப்பட்ட வரவு செலவு திட்டம்: வியாழேந்திரன் (PHOTOS)
இந்த நாட்டை எவ்வாறு அபிவிருத்தி செய்யலாம் என்பது தொடர்பில் தூர நோக்குடன் நாங்கள் செயற்பட வேண்டும்.குறுகிய சிந்தனைகளையே சிலர் பேசிக்கொண்டிருப்பதாக பின்தங்கிய கிராம பிரதேச அபிவிருத்தி, வீட்டு விலங்கின வளர்ப்பு மற்றும் சிறுபொருளாதார பயிர்ச்செய்கை மேம்பாட்டு இராஜாங்க அமைச்சர் சதாசிவம் வியாழேந்திரன் தெரிவித்துள்ளார்.
நாட்டைக்கட்டி எழுப்பும் சுபீட்சத்தின் நோக்கு தேசிய கொள்கைத்திட்டமிடலுக்கு அமைய பின்தங்கிய கிராம பிரதேச அபிவிருத்தி, வீட்டு விலங்கின வளர்ப்பு மற்றும் சிறுபொருளாதார பயிர்ச்செய்கை மேம்பாட்டு இராஜாங்க அமைச்சர் சதாசிவம் வியாழேந்திரன் வழிகாட்டலில் மட்டக்களப்பு மாவட்டத்தில் இஞ்சி உற்பத்திக்கான இஞ்சி விதைகள் வழங்கும் நிகழ்வு இன்று மண்முனை வடக்கு பிரதேச செயலக மண்டபத்தில் நடைபெற்றுள்ளது.
மண்முனை வடக்கு பிரதேச செயலாளர் வி.வாசுதேவன் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் இராஜங்க அமைச்சர் சதாசிவம் வியாழேந்திரன் பிரதம அதிதியாக கலந்து கொண்டு இஞ்சி செய்கையை முன்னுரிமைப்படுத்தி ஊக்குவிக்கும் வகையில் தெரிவு செய்யப்பட்ட பயனாளிகளுக்கு வழங்கி வைத்துள்ளார்.
இதன்போது மண்முனை வடக்கு பிரதேச செயலாளர் பிரிவில் 57பேர் தெரிவு செய்யப்பட்டு சுமார் 8 இலட்சம் ரூபா பெறுமதியான இஞ்சி விதைகள் வழங்கி வைக்கப்பட்டுள்ளன.
இந்நிகழ்வில் பிரதேச செயலக உதவி திட்டமிடல் பணிப்பாளர் சுதர்சன் உட்பட பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் மற்றும் பயனாளிகள் என பலர் கலந்து கொண்டிருந்தனர்.
இங்கு கருத்து தெரிவித்த இராஜாங்க அமைச்சர்,
இலங்கை வரலாற்றில் முதன்முறையாக கிராமிய பொருளாதாரத்தினை நோக்காக கொண்டு இம்முறை வரவு செலவு திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது.
இந்த நாடு முற்றுமுழுதாக இறக்குமதியை நம்பியே இருக்கின்றது.உற்பத்தி என்பது எதுவும் அற்ற நிலையே உள்ளது. நாட்டைப்பற்றி சிந்திக்கும் போது அரசியலை மட்டும் வைத்து சிந்திக்க கூடாது.
வடகிழக்கு மாகாணம் இலங்கையில் அரைவாசி நிலபரப்புகளைக்கொண்டுள்ளது.அனைத்து வளங்களும் உள்ளபோதிலும் சரியான திட்டமிடல்கள் முன்னெடுக்கப்படவில்லை.
விவசாயத்தினை முன்னேற்றனும்,மீன்பிடியை முன்னேற்றனும் என்று கூறும் சில அரசியல் தலைவர்கள் நாங்கள் எங்காது வீதியை,குளத்தினை புனரமைத்தால் இது தமிழர்களுக்கு தேவையா என கேட்கின்றனர்.









