வரவு செலவுத்திட்டத்திற்கு முன் அரச அச்சகத் திணைக்கள பணியாளர்களுக்கு விடுமுறையா? மறுக்கிறார் அரச அச்சகர்
அரச அச்சகத் திணைக்களத்தில் பணியாற்றும் பெரும்பாலான பணியாளர்கள், நேற்று முதல் ஒன்றரை நாள் விடுமுறையில் அனுப்பப்பட்டுள்ளதாக கூறப்படும் தகவலை அரச அச்சகர் கங்கானி கே.டி.லியனகே மறுத்துள்ளார்.
பணியாளர்களுக்கு விடுமுறை வழங்கப்படவில்லை என்றும் அவர் கொழும்பின் ஊடகம் ஒன்றிடம் தொிவித்துள்ளார்.
அரச அச்சகத்தின் நம்பகமான தகவலின் அடிப்படையில் பெரும்பாலான தொழிலாளர்கள் நேற்று அரை நாள் மற்றும் இன்று முழு நாள் விடுமுறையில் அனுப்பப்பட்டுள்ளதாக வெளியான தகவல் தொடர்பிலேயே அவர் இந்த மறுப்பை வெளியிட்டதாக கொழும்பின் ஊடகம் குறிப்பிட்டுள்ளது.
இந்த நிலையில் நேற்று விடுமுறையில் அனுப்பப்பட்ட பணியாளர்கள், இன்று நாடாளுமன்றத்தில் வரவு செலவுத்திட்ட உரை முடிந்ததும் பணிகளுக்கு திரும்ப முடியும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளதாக குறித்த செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், அரசு அச்சகத்தில் வரவுசெலவுத்திட்ட உரை அச்சிடப்படுவதே விடுமுறை அளிக்கப்பட்டதற்கான காரணம் என அரச அச்சக ஊழியர்கள் கருதுகின்றனர், எனினும் வரலாற்றில் முந்தைய வரவுசெலவுத்திட்ட உரைகளுக்கு முன்னதாக அரச அச்சகத்தின் ஊழியர்கள் ஒருபோதும் விடுப்பில் அனுப்பப்படவில்லை என்று அரச அச்சத்தரப்புக்கள் சுட்டிக்காட்டியுள்ளதாகவும் அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த செய்தி குறித்து எமது செய்திச் சேவை அரச அச்சகத்தை தொடா்பு கொள்ள முயற்சித்தபோதும், தொலைபேசியின் ஊடான அழைப்புக்களுக்கு பதிலளிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
