பௌத்த மத வழிபாட்டுத் தலங்களுக்கு அச்சுறுத்தல் விடுத்த இளைஞன் கைது
இலங்கையின் முக்கிய பௌத்த மதத் தலங்கள் மீது தாக்குதல் நடத்தி அழித்தொழிக்கப் போவதாக முஸ்லிம் பெயரில் அச்சுறுத்தல் விடுத்த பௌத்த இளைஞரொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
குருநாகல் அருகே இப்பாகமுவ பிரதேசத்தைச் சேர்ந்த ஜே.எம். அமோத்ய மதூக தமோச எனப்படும் 21 வயதான சிங்கள பௌத்த இளைஞனே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த இளைஞர் முஸ்லிம் பெயர்களில் வட்சப் குழுமங்களை உருவாக்கி, சமூக வலைத்தளங்களில் கௌதம புத்தரின் உருவங்களை சிதைத்து, திரிபுபடுத்தியும், ஸ்ரீ தலதா மாளிகை, அநுராதபுரம் புனித வெள்ளரசு மரம், (ஸ்ரீ மகா போதிய), தூபாராமய மற்றும் தம்புள்ள விகாரை உள்ளிட்ட முக்கிய பௌத்த ஆலயங்கள் மீது தாக்குதல் நடத்தி அவற்றை அழித்தொழிக்கப் போவதாக அச்சுறுத்தல் விடுத்துள்ளார்.
தொடர் தாக்குதல்கள்
மேலும் உலகம் முழுவதிலுமிருந்து பௌத்த மதத்தை ஒழிப்பதே அனைவரின் ஒரே நோக்கம் என்றும், 2026 நவம்பர் 19 அன்று மேற்குறித்த பௌத்த தலங்களைக் குறிவைத்து தொடர் தாக்குதல்கள் நடத்தப்படும் என்றும் செய்திகளைப் பரிமாறிக்கொண்டுள்ளார்.

இது தொடர்பில் தம்புள்ள ரஜமகா விகாரையின் பிரதம தேரர், கலாநிதி தானியகம ஆனந்த அனுநாயக்க தேரர் அளித்த முறைப்பாட்டின் பேரில் விசாரணை நடத்திய குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் கணினிக் குற்றப் புலனாய்வுப் பிரிவு, இப்பாகமுவ பிரதேசத்தில் வைத்து குறித்த இளைஞனைக் கைது செய்துள்ளது.
அதன்போது குறித்த இளைஞனின் மொபைல் போனில் இருந்து இன வெறுப்புப் பேச்சுகள், திரிக்கப்பட்ட புகைப்படங்கள் மற்றும் உரையாடல்கள் அடங்கிய ஆதாரங்களை சிஐடியினர் கைப்பற்றியுள்ளனர்.
விசாரணைகள்
அதனையடுத்து கைது செய்யப்பட்ட குறித்த இளைஞன் நேற்று(02) மாலை கொழும்பு பிரதான மாஜிஸ்திரேட் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டபோது எதிர்வரும் 16ஆம் திகதி வரை குறித்த இளைஞனை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டார்.

முஸ்லிம் பெயர்களைப் பயன்படுத்தி வட்சப் குழுமங்கள் உருவாக்கப்பட்டு இனவெறுப்பு கருத்துக்கள் பரப்பப்பட்டதன் பின்னணியில் வேறு யாரேனும் உள்ளனரா என்பது தொடர்பிலும் விசாரணைகள் இடம்பெறுகின்றன.