ஞானசார தேரருக்காகப் போராட்டம்! மகாநாயக்க தேரர்கள் வெளியிட்ட அதிரடி அறிவிப்பு
பௌத்த பிக்குகள் தங்களது துறவற ஒழுக்கத்தைக் கண்டிப்புடன் கடைப்பிடித்து, பௌத்த சாசனத்தின் கண்ணியத்தையும் மகா சங்கத்தினருக்குச் சமூகத்தில் வழங்கப்படும் மரியாதையையும் பாதுகாக்க வேண்டும் என்று பிரதான பௌத்த பீடங்களின் மகாநாயக்க தேரர்கள் இன்று கூட்டறிக்கை ஒன்றின் மூலம் வலியுறுத்தியுள்ளனர்.
இந்தக் கூட்டறிக்கையில் மல்வத்து, அஸ்கிரிய பீடங்களின் மகாநாயக்க தேரர்கள் மற்றும் அமரபுர மகா நிகாய, ராமஞ்ஞ மகா நிகாய ஆகியவற்றின் தலைமைத் தேரர்கள் இணைந்து கையொப்பமிட்டுள்ளனர்.
ஜனாதிபதி பொதுமன்னிப்பு
சிறையிலுள்ள கலகொட அத்தே ஞானசார தேரருக்கு ஜனாதிபதி பொதுமன்னிப்பு வழங்கப்பட வேண்டும் என்று வலியுறுத்திப் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வரும் பின்னணியிலேயே இந்த முக்கிய அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

போராட்டங்கள் உள்ளிட்ட எந்தவொரு நடவடிக்கைகளிலும் ஈடுபடும் போது, பிக்குகள் பௌத்த துறவற மரபுகளையும் விதிகளையும் மீறாது நடந்து கொள்ள வேண்டும் என்றும், பாரம்பரியமாகச் சமூகத்தில் பிக்குகளுக்குக் கிடைக்கும் மதிப்பைக் காப்பாற்ற வேண்டியது அவசியமாகும் என்றும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
மகாநாயக்க தேரர்களின் இந்த வழிகாட்டல் மற்றும் தலையீட்டைத் தொடர்ந்து, கொழும்பு விகாரமகாதேவி பூங்காவில் கடந்த 10 நாள்களாகத் தொடர்ச்சியாகச் சத்தியாக்கிரகப் போராட்டத்தில் ஈடுபட்டு வந்த பௌத்த பிக்குகள் தங்களது போராட்டத்தை இன்று மாலை முதல் தற்காலிகமாக இடைநிறுத்தத் தீர்மானித்துள்ளனர்.