வரிசைகளை கவனத்தில் கொள்ளாது எரிபொருளை நிரப்பி செல்லும் பிக்குமார்:பொது மக்கள் குற்றச்சாட்டு
நாடு முழுவதும் எரிபொருள் நிரப்பும் நிலையங்களுக்கு அருகில் காணப்படும் நீண்ட வரிசைகளை பொருட்படுத்தாது பௌத்த பிக்குமார் வந்து எரிபொருளை பெற்று செல்வதாக வரிசைகளில் நிற்கும் பொது மக்கள் குற்றம் சுமத்தியுள்ளனர்.
சில பிக்குமார் விகாரைகளின் வாகனங்கள் மாத்திரமல்லாது தமக்கு நெருக்கமானவர்களின் வாகனங்களை எடுத்து வந்து வரிசையில் நிற்காது எரிபொருளை நிரப்பி செல்வதாகவும் அவர்கள் கூறியுள்ளனர்.
இவர்கள் பௌத்த பிக்குமார் என்பதால், வரிசையில் இருப்பவர்கள் எவரும் எதிர்ப்புகளை வெளியிடுவதில்லை. பிக்குமார் அத்தியவசிய சேவைகள் பட்டியலில் இல்லாத நிலைமையில், இது தொடர்பாக அதிகாரிகள் கவனம் செலுத்த வேண்டும் எனவும் வரிசையில் நிற்கும் மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இலங்கையில் ஏற்பட்டுள்ள எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக எரிபொருளை பெற்றுக்கொள்வதற்காக நாடு முழுவதிலும் உள்ள எரிபொருள் நிரப்பும் நிலையங்களுக்கு அருகில் மக்கள் நீண்ட வரிசைகளில் இரவு பகல் பாராது காத்திருந்து வருகின்றனர்.