கொழும்பு நீதவான் நீதிமன்ற களஞ்சியசாலைக்குள் புகுந்த திருடர்கள்: பொலிஸ் விசாரணை தீவிரம்
கொழும்பு நீதவான் நீதிமன்றத்தின் நிலக்கீழ் வழக்குக் களஞ்சியசாலையின் பாதுகாப்பு கதவுகள் அடையாளம் தெரியாத சிலரால் இரண்டாவது முறையாகவும் உடைக்கப்பட்டுள்ளதாக வாழைத்தோட்டம் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்த சம்பவம் நேற்றைய தினம்(16.10.2023) இரவு இடம்பெற்றுள்ளதாகவும், களஞ்சியசாலை கதவை திருடர்கள் உடைத்துள்ளதாகவும் பொலிஸாருக்கு முறைப்பாடு அளிக்கப்பட்டுள்ளது.
கடந்த 6ஆம் திகதி குறித்த நிலக்கீழ் களஞ்சியசாலை கதவை திருடர்கள் உடைத்துள்ளதாக, கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றத்தின் பிரதான பதிவாளர் வாழைத்தோட்டம் பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளார்.
இதற்கமைய இது தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்ட பொலிஸார், நீதிமன்றில் சம்பவம் தொடர்பான விசாரணை அறிக்கைகளை முன்வைத்துள்ளனர்.
இந்நிலையில் இன்று (17ம் திகதி) இந்தக் களஞ்சியசாலை கதவுக்கு உள்ளேயும் வெளியேயும் இருந்த நான்கு பூட்டுக்களும் உடைக்கப்பட்டு, கதவு திறக்கப்பட்டிருந்ததாக பொலிஸாருக்கு நீதிமன்ற அதிகாரி ஒருவர் முறைப்பாடு வழங்கியுள்ளார்.
இதன்படி குறித்த நிலக்கீழ் களஞ்சியசாலையில் பழைய வழக்குகள் தொடர்பான வழக்குப் பொருட்கள், தங்கப் பொருட்களுடன் கூடிய பல பெட்டகங்கள், துப்பாக்கிகள், ஆயுதங்கள் உள்ளிட்டவை வைக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.