இலங்கையில் இருந்து வெளியேற்றும் முடிவுக்கு எதிராக நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்த பிரித்தானிய யுவதி
இலங்கையில் இருந்து வெளியேற்ற குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் எடுத்துள்ள தீர்மானத்தை செல்லுப்படியற்றது என உத்தரவிடுமாறு கோரி பிரித்தானிய பிரஜையான ஸ்கொட்லாந்து யுவதி கெலின் பிரேஷர் மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் ரீட் மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார்.
மனுவில் குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்கள கட்டுப்பாட்டாளர் பிரதிவாதியாக குறிப்பிடப்பட்டுள்ளார்.
போராட்டத்திற்கு செயற்பாட்டு ரீதியான பங்களிப்பை வழங்கினேன்
காலிமுகத்திடலில் நடைபெற்ற கோட்டா கோ கம போராட்டத்தில் தான் செயற்பாட்டு ரீதியாக பங்களிப்பு வழங்கியதாக மனுதாரர் மனுவில் கூறியுள்ளார்.
இதன் பின்னர் குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் தனக்கு வழங்கப்பட்டிருந்த விசா அனுமதியை தன்னிச்சையாக இரத்துச் செய்துள்ளதாக அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.
திணைக்களத்தின் முடிவு சட்டவிரோதமானது
எவ்வித நியாயமான அடிப்படைகளும் இன்றி குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் எடுத்துள்ள இந்த தீர்மானம் சட்டவிரோதமானது என தீர்ப்பளித்து, அதனை செல்லுப்படியற்றது என அறிவித்து உத்தரவொன்றை பிறப்பிக்குமாறு கெலின் பிரேஷர் நீதிமன்றத்திடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
காலிமுகத்திடல் போராட்ட களத்தில் நடந்த விடயங்களை இவர் சமூக வலைத்தளங்களில் நேரலையில் பதிவேற்றியமை தொடர்பில் அவருக்கு வழங்கப்பட்டுள்ள விசா அனுமதியை இரத்துச் செய்த குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம், எதிர்வரும் 15 ஆம் திகதிக்கு முன்னர் நாட்டில் இருந்து வெளியேறுமாறு உத்தரவிட்டிருந்தது.