இலங்கையில் புதிய அரசாங்கத்தின் நடைமுறைகள் குறித்து பிரித்தானியா வெளியிட்டுள்ள கருத்து
இலங்கையின் கடந்தகால அட்டூழியங்கள் மற்றும் மனித உரிமை மீறல்கள் தொடர்பில் புதிய இலங்கை அரசாங்கத்தின் நடைமுறைகள் சாதகமானவை என ஐக்கிய இராச்சியத்தின் வெளிவிவகார, பொதுநலவாய மற்றும் அபிவிருத்தி விவகாரங்களுக்கான செயலாளர் டேவிட் லாம்மி (David Lammy ) தெரிவித்துள்ளார்.
இந்தநிலையில், இலங்கையில் புதிய அரசாங்கத்துடன் இணைந்து செயற்பட விரும்புவதாக டேவிட் லாம்மி குறிப்பிட்டுள்ளார்.
பிரித்தானிய வெளிவிவகாரக் குழு விசாரணையின்போது, இங்கிலாந்து நாடாளுமன்ற உறுப்பினர் உமா குமரன் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் இந்தக் கருத்தை வெளியிட்டுள்ளார்.
சர்வதேச குற்றவியல் நீதிமன்றம்
"2023ஆம் ஆண்டில், நீங்கள் தமிழர்களுடன் தோளோடு தோள் நின்று, அட்டூழியங்களில் ஈடுபடுபவர்களை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திற்கு அனுப்ப ஐக்கிய நாடுகளின் மனித உரிமை ஆணையாளரின் பரிந்துரையை பரிசீலிக்குமாறு அப்போதைய பிரித்தானிய அரசாங்கத்தை வலியுறுத்தினீர்கள்.
சர்வதேச நீதிப் பொறிமுறைக்கான ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் ஆணையாளரின் பரிந்துரையை பரிசீலிக்குமாறு அப்போதைய எதிர்க்கட்சித் தலைவரும் அப்போதைய அரசாங்கத்தை வலியுறுத்தினார்.
இந்தநிலையில், நீங்கள் இப்போது வெளியுறவுச் செயலாளராகவும், அவர் இப்போது பிரதமராகவும் இருப்பதைக் கூறுவதில் நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன்.
எனவே உங்கள் கருத்துக்களுக்கு ஆதரவாக நின்று, இலங்கை விடயத்தை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்துக்கு அனுப்புமாறு நான் இன்று உங்களிடம் கேட்கலாமா?” என்று உமா குமரன் கேள்வி எழுப்பியுள்ளார்.
பொதுநலவாய மற்றும் அபிவிருத்தி விவகாரங்கள்
இதற்கு பதிலளித்த லாம்மி, இலங்கையில் புதிய அரசாங்கம் ஒன்று ஆட்சிக்கு வந்துள்ளதுடன், கடந்த காலங்களில் நடந்த அட்டூழியங்கள் மற்றும் மனித உரிமை மீறல்கள் தொடர்பாக தற்போதைய அரசாங்கத்தின் அனுகுமுறைகள் நேர்மறையானவை.
பிரதமரும், நானும் அந்த புதிய அரசாங்கத்துடன் இணைந்து செயற்படுவது முக்கியமானது.
உங்களுக்குத் தெரியும், நான் பல ஆண்டுகளாக தமிழ் சமூகங்களுடன், குறிப்பாக இந்த நாட்டில் அதிக நேரத்தை செலவிட்டேன்.
எனவே உணர்வின் வலிமையில், இந்த பிரச்சினைகளை எழுப்பியுள்ளீர்கள் என்பதையும் நான் உணர்கிறேன் என்று டேவிட் லாம்மி உமா குமரனுக்கு பதிலளித்துள்ளார்.
மேலும், விவகாரங்கள் சிக்கலானவை, எனினும் ஆழமான, வலிமிகுந்த அட்டூழியங்களை இழைத்தவர்கள் பொறுப்புக்கூற வேண்டியது முக்கியம்” என்று ஐக்கிய இராச்சியத்தின் வெளிவிவகார, பொதுநலவாய மற்றும் அபிவிருத்தி விவகாரங்களுக்கான செயலாளர் டேவிட் லாம்மி தெரிவித்துள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |