இலங்கை தொடர்பில் பிரித்தானிய வெளிவிவகார செயலாளரிடம் எழுப்பப்பட்ட கேள்வி
இலங்கையை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் பாரப்படுத்தல் மற்றும் கடந்தகால உரிமை மீறல்கள் தொடர்பில் பொறுப்புக்கூறலை உறுதிப்படுத்தல் என்பன குறித்து முன்னர் கொண்டிருந்த கடப்பாடுகளைத் தற்போது நிறைவேற்றுவீர்களா என பிரித்தானிய (UK) வெளிவிவகார செயலாளர் டேவிட் லெமியிடம் அந்நாட்டுப் நாடாளுமன்ற உறுப்பினர் உமா குமரன் கேள்வி எழுப்பியுள்ளார்.
பிரித்தானிய நாடாளுமன்றத்தில் கடந்த வாரம் (27) நடைபெற்ற வெளிவிவகாரக்குழுக் கூட்டத்திலேயே இலங்கையைப் பூர்விகமாக கொண்ட பிரித்தானிய நாடாளுமன்ற உறுப்பினர் உமா குமரன், வெளிவிவகார செயலாளர் டேவிட் லெமியிடம் மேற்கூறப்பட்ட விடயம் தொடர்பில் கேள்வி எழுப்பியுள்ளார்.
பிரித்தானிய அரசாங்கம்
இதன்போது, "இன்றை தினம் (27) உலகெங்கிலும் வாழும் தமிழர்களுக்கு முக்கியமான நாளாகும்" என்று சுட்டிக்காட்டிய உமா குமரன், 'கடந்த 2023ஆம் ஆண்டு தமிழர்களுக்குத் தோள் கொடுக்குமாறும், மிகமோசமான மனித உரிமை மீறல்களுடன் தொடர்புடைய குற்றவாளிகளை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் பாரப்படுத்துமாறும் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் உயர்ஸ்தானிகரால் முன்வைக்கப்பட்ட பரிந்துரையை பரிசீலிக்குமாறும் நீங்கள் பிரித்தானிய அரசாங்கத்தை வலியுறுத்தியிருந்தீர்கள்.
அதுமாத்திரமன்றி ஐ.நா மனித உரிமைகள் உயர்ஸ்தானிகரின் சர்வதேச நீதிப்பொறிமுறை தொடர்பான பரிந்துரையைப் பரிசீலிக்குமாறு அப்போதைய எதிர்க்கட்சித்தலைவரும் வலியுறுத்தியிருந்தார். இப்போது நீங்கள் வெளிவிவகார செயலாளர். அவர் பிரதமர்.
எனவே, நீங்கள் உங்களது முன்னைய கருத்துக்களின்படி செயற்படுவீர்களா? மனித உரிமை மீறல்களுடன் தொடர்புடையவர்களை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்துக்குப் பரிந்துரைப்பீர்களா?' என டேவிட் லெமியிடம் கேள்வி எழுப்பினார்.
அதற்குப் பதிலளித்த வெளிவிவகார செயலாளர் டேவிட் லெமி, "தற்போது இலங்கையில் புதிய அரசாங்கம் ஆட்சிபீடம் ஏறியிருக்கிறது. அத்தோடு கடந்தகால மனித உரிமை மீறல்களுடன் தொடர்புபட்ட விடயத்தில் முன்னேற்றகரமான சமிக்ஞைகள் தென்படுகின்றன.
அதேவேளை, கடந்தகால மீறல்களுடன் சம்பந்தப்பட்ட பல்வேறு கொள்கைகள் தொடர்பில் நாம் அவதானம் செலுத்தியிருக்கிறோம். மேலும் அத்தகைய மீறல்களில் ஈடுபட்டவர்கள் பொறுப்புக்கூறலுக்கு உட்படுத்தப்படுவது மிக அவசியமாகும்' என்று தெரிவித்துள்ளார்.