பிரித்தானிய போர் விமானம் கடலில் விழுந்து விபத்து! - விசாரணைகள் தீவிரம்
பிரித்தானிய போர் விமானம் ஒன்று மத்திய தரைக் கடலில் வழக்கமான நடவடிக்கையின் போது விழுந்து நொறுங்கியதாக பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
F-35 என்ற போர் விமானம் ஒன்றே இவ்வாறு விழுந்து நொறுங்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. எவ்வாறாயினும், குறித்த விமானத்தில் இருந்த விமானி பிரித்தானிய கடற்படையின் விமானம் தாங்கி கப்பலான HMS குயின் எலிசபெத்திற்கு பாதுகாப்பாக திரும்பியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்த சம்பவம் குறித்த விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக பாதுகாப்பு அமைச்சகம் அறிவித்துள்ளது.இந்த சம்பவம் சர்வதேச கடல் பகுதியில் 10:00 GMT மணிக்கு இடம்பெற்றுள்ளது.
இந்நிலையில், விசாரணையின் போது கருத்து தெரிவிப்பது பொருத்தமற்றது என்றும் பாதுகாப்பு அமைச்சகம் அறிவித்துள்ளது. விமானம் புறப்பட்ட உடனேயே கீழே விழுந்ததாக பாதுகாப்பு செயலாளர் Ben Wallace தெரிவித்தார்.
இது குறித்து தொடர்ந்தும் பேசிய அவர்,
“விமானி பாதுகாப்பாகவும், நலமாகவும், விமானத்தில் இருந்து திரும்பியதை அடுத்து நாங்கள் மகிழ்ச்சி அடைகிறோம். F-35 போர் விமானம் விபத்துக்குள்ளான போதிலும், HMS குயின் எலிசபெத் கப்பலில் இயக்க மற்றும் பயிற்சி தொடர்வதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
கடந்த ஆறு மாதங்களாக HMSகுயின் எலிசபெத் கப்பலில் ஏறக்குறைய 2,000 டேக்-ஆஃப் மற்றும் தரையிறக்கங்களை எந்த பெரிய அசம்பாவிதமும் இல்லாமல் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இந்த விமானங்கள் பிரித்தானியாவின் மிகவும் மேம்பட்ட மற்றும் விலையுயர்ந்த ஜெட் விமானங்கள் ஆகும். ஏறக்குறைய 100 மில்லியன் பவுண்ட்ஸ் செலவாகும்.
குறித்த போர் விமானம் செங்குத்தாக தரையிறங்க முடியும் என்பதுடன், விமானத்தை மீட்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
F-35 மிகவும் உணர்திறன் வாய்ந்த தொழில்நுட்பம் மற்றும் தரவுகளுடன் நிரம்பியுள்ளது. பிரித்தானிய F-35 போர் விபத்துக்குள்ளாவது இதுவே முதல் முறையாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.