பாரிய நிதி மோசடியை ஒப்புக்கொண்ட பிரித்தானியா வாழ் தமிழர்
பிரித்தானிய பிரஜையான தமிழர் ஒருவர் இலங்கையில் பாரிய அளவில் நிதி மோசடியில் ஈடுபட்டதாக குற்றம் சுமத்தப்பட்டு வழக்குத் தொடரப்பட்டுள்ளதாக இலங்கையின் ஆங்கில பத்திரிக்கை ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
காணி விற்பனை தொடர்பிலான தரகு பணத்தை செலுத்தாது மோசடி செய்துள்ளதாக குற்ற விசாரணை பிரிவினர் நீதிமன்றிற்கு அறிவித்துள்ளனர்.
இந்நிலையில், பிரித்தானிய பிரஜையான தமிழர் ஒருவரே இவ்வாறு குற்றம் சாட்டப்பட்டுள்ளார்.
மேலும், தாம் நிதி மோசடியில் ஈடுபட்டதனை குறித்த நபர் ஒப்புக்கொண்டுள்ளதாக குற்ற விசாரணை பிரிவினர் கொழும்பு கோட்டை நீதிமன்றில் தெரிவித்துள்ளனர்.
மோசடி சம்பவம்
இதற்கமைய, தரகருக்கு வழங்கப்பட வேண்டிய தரகு பணத்தில் ஒரு தொகுதியை குறித்த நபர் செலுத்தாது மோசடி செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
சுமார் 195 மில்லியன் ரூபா பணம் இவ்வாறு மோசடி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இந்த மோசடி குற்றச்சாட்டு விசாரணை கொழும்பு கோட்டை நீதிமன்றில் அண்மையில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.
இதன் போது குற்றம் சுமத்தப்பட்ட தாம் மோசடியில் ஈடுபட்டதனை குற்ற விசாரணை பிரிவிடம் ஏற்றுக் கொண்டதாக நீதிமன்றில் அறிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த ஆகஸ்ட் மாதம் 17ஆம் திகதி நபரொருவர், குற்ற விசாரணை பிரிவிற்கு சட்டத்தரணிகளுடன் சென்று தன்னார்வ அடிப்படையில் வாக்குமூலம் ஒன்றை அளித்துள்ளார்.
ஏற்கனவே அளிக்கப்பட்ட வாக்குமூலத்திற்கு மேலதிகமாக அவர் இந்த வாக்குமூலத்தை அளித்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில், குறித்த மோசடி கொள்ளுப்பிட்டி பகுதியில் இடம்பெற்றுள்ளதாக விசாரணைகள் மூலம் வெளிவந்துள்ளது. தனியார் நிறுவனமொன்றிற்கு சொந்தமான காணியானது மற்றுமொரு தனியார் நிறுவனத்திற்கு விற்பனை செய்யப்பட்டுள்ளது.
பொலிஸார் விசாரணை
இந்த காணி கொடுக்கல் வாங்கலுக்கான தரகு பணமாக 131718000 ரூபா பணம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.
இந்த தரகு கட்டணத்தில் ஒரு பகுதி மட்டும் குறித்த தரகருக்கு செலுத்தப்பட்டதாகவும் ஏனைய பணம் பிரித்தானியாவின் வங்கியொன்றில் இருந்து குற்றம் சாற்றப்பட்டவருக்கு சொந்தமான கணக்கில் வைப்பிலிடப்பட்டுள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
இந்த காணி 790 மில்லியன் ரூபாவிற்கு விற்பனை செய்யப்பட்டுள்ளததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இதன்படி கொள்ளுப்பிட்டிய பகுதியில் ஒரு பர்சேஸ் காணி 3.6 மில்லியன் ரூபாய் என்ற அடிப்படையில் 219.5 பர்ச்சேஸ் காணி கடந்த 2004 ஆம் ஆண்டு கொள்வனவு செய்யப்பட்டுள்ளது.
பிரித்தானியாவை மையமாகக் கொண்டு இயங்கி வரும் தனியார் நிறுவனத்தைச் சேர்ந்த 10 பங்குதாரர்களினால் இந்த காணிக்கு முதலீடு செய்யப்பட்டிருந்தது.
பின்னர் இந்தக் காணி 2019ஆம் ஆண்டு வேறு தரப்பினருக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளது. இந்த காணி 790 மில்லியன் ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டுள்ளதாகவும் இவ்வாறு விற்பனை செய்யப்பட்ட காணிக்காக சுமார் 595 மில்லியன் ரூபாய் பணம் மட்டுமே குறித்த தனியார் நிறுவனத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
வழக்கு விசரணை
எஞ்சிய 195 மில்லியன் ரூபாய் பணம் மோசடியான முறையில் பெற்றுக் கொள்ளப்பட்டுள்ளதாகவும் இது ஒரு நம்பிக்கை மீறல் செயல் எனவும் குற்ற விசாரணை பிரிவினர் நடத்திய விசாரணைகள் மூலம் தெரியவந்துள்ளது.
இந்த வழக்கு விசரணையின் போது குற்றம் சாட்டப்பட்டவருக்கு வெளிநாடு செல்ல விதிக்கப்பட்டிருந்த நீதிமன்ற தடை தற்காலிக அடிப்படையில் நீக்கப்பட்டுள்ளது.
மேலும் சுமார் 30 மில்லியன் ரூபா பிணையின் அடிப்படையில் வெளிநாட்டு பயணத்தடை நீக்கப்பட்டுள்ளதாக நீதிமன்றம் அறிவித்துள்ளது.
இந்நிலையில் இந்த மனு எதிர்வரும் டிசம்பர் மாதம் 13ம் திகதி மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட உள்ளமை குறிப்பிடத்தக்கது.