இலங்கையின் அரசியல் நிலைமைகள் தொடர்பில் பிரித்தானியாவின் அறிவிப்பு
இலங்கையின் அரசியல் நிலைமைகள் குறித்து தொடர்ந்தும் உன்னிப்பாக அவதானித்துக் கொண்டிருப்பதாக பிரித்தானியா அறிவித்துள்ளது.
பிரித்தானியாவின் வெளிநாட்டலுவல்கள் அமைச்சின் பொதுநலவாய நாடுகள் மற்றும் அபிவிருத்தி தொடர்பான இணையமைச்சர் அமந்தா மிலின், அந்நாட்டு நாடாளுமன்றில் எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் கேள்வியொன்றுக்குப் பதிலளிக்கும் போது இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
பிரித்தானியாவின் அறிவிப்பு
இது தொடர்பில் தொடர்ந்தும் அவர் குறிப்பிட்டுள்ளதாவது, “இலங்கையின் பொருளாதார மற்றும் அரசியல் மாற்றங்கள் குறித்து பிரித்தானியா தொடர்ந்தும் உன்னிப்பாக அவதானித்துக் கொண்டிருக்கின்றது. மேற்குறித்த சிக்கல்களை தீர்த்துக்கொள்ள அமைதியான மற்றும் ஜனநாயக ரீதியான வழிமுறைகள் கைக்கொள்ளப்பட வேண்டும்.
அண்மையில் பிரதமராக இருந்த ரணில் விக்ரமசிங்க, பின்னர் ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்ட நிகழ்வு வேகமான அரசியல் மாற்றங்களின் ஒரு எடுத்துக்காட்டாகும். அது தொடர்பில் உன்னிப்பாக நாங்கள் அவதானித்துக் கொண்டிருக்கின்றோம்.
வன்முறைகளை தவிர்த்தல்
நீதித்துறைக்கு மதிப்பளிக்குமாறும், வன்முறை மற்றும் அதன் காரணமான இழப்புகளை தவிர்க்கும் வழிமுறைகளை பின்பற்றுமாறும் அனைத்து தரப்பினரிடமும் நாங்கள் வலியுறுத்திக்கொள்ள விரும்புகின்றோம்.
சர்வதேச நாணய நிதியத்திடம் இலங்கை கடன் பெற்றுக்கொள்ளும் போது பிரித்தானியா அந்த விடயத்தில் ஆழமான செல்வாக்கு செலுத்தக் கூடிய நாடு என்பதை யாரும் மறந்துவிடலாகாது. சர்வதேச நாணய நிதியம் மற்றும் ஐக்கிய நாடுகள் சபை என்பவற்றில் பிரித்தானியா இன்னும் முக்கிய பங்காளியாக இருப்பதை நினைவூட்டிக்கொள்ள விரும்புகின்றோம்”என தெரிவித்துள்ளார்.