பிரித்தானியாவின் கோவிட் - 19 நிலவரம்! - 24 மணி நேரத்தில் 915 பேர் பலி
பிரித்தானியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 20,634 பேருக்கு கோவிட் - 19 தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
பிரித்தானியாவில் பரவி வரும் புதிய வகை கோவிட் - 19 வைரஸ் தொற்று காரணமாக கடந்த சில வாரங்களாக நோய் தொற்றாளர்களின் எண்ணிக்கை வெகுவாக உயர்ந்துள்ளது.
இந்நிலையில் கடந்த 24 மணி நேரத்தில் அங்கு மேலும் 20,634 பேருக்கு கோவிட் - 19 தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதனால் பிரித்தானியாவில் வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை தற்போது 38,92,459 ஆக உயர்ந்துள்ளது. கோவிட் - 19 தொற்றுக்கு ஒரேநாளில் மேலும் 915 பேர் உயிரிழந்ததால், அங்கு பலியானோர் எண்ணிக்கை ஒரு லட்சத்து 10 ஆயிரத்து 250 ஆக உயர்ந்துள்ளது. உலக அளவில் கோவிட் - 19 தொற்றால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளின் வரிசையில் தற்போது பிரித்தானியா ஐந்தாவது இடத்தில் இருக்கின்றது.
உலக அளவில் கோவிட் - 19 வைரஸ் தொற்று பாதிப்பில் முதலிடத்தில் அமெரிக்காவும், இரண்டாம் இடத்தில் இந்தியாவும், மூன்றாவது இடத்தில் பிரேசிலும் உள்ளன.
இதுவரை 10.51 கோடிக்கும் அதிகமானோர் கோவிட் - 19 வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
வைரஸ் தொற்றுக்கு இதுவரை 22.84 லட்சத்துக்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது. இதேவேளை, பிரித்தானியாவில் கோவிட் -19 தடுப்பூசி பெற்றக்கொண்டவர்களின் மொத்த எண்ணிக்கை 10,490,487 ஆக உயர்ந்துள்ளது.
மேலும் 500,000 க்கும் அதிகமான மக்கள் இப்போது இரண்டாவது டோஸ் மருந்தினை பெற்றுக்கொண்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.