தென்னிந்திய நடிகைகளின் வருகை தமிழ் சமூகத்தைப் போதை மயப்படுத்தும் செயல்: ஐங்கரநேசன் சுட்டிக்காட்டு
"தென்னிந்திய நடிகைகளை நாட்டுக்கு அழைத்து வருவது தமிழ்ச் சமூகத்தைப் போதை மயப்படுத்தும் இன்னுமொரு நிகழ்ச்சி நிரலே" என தமிழ்த் தேசியப் பசுமை இயக்கத்தின் தலைவர் பொ.ஐங்கரநேசன் தெரிவித்துள்ளார்.
தமிழ்த் தேசியப் பசுமை இயக்கத்தின் பசுமை அறிவொளி நிகழ்ச்சி கடந்த சனிக்கிழமை (22.02.2024) மல்லாகத்தில் நடைபெற்றுள்ளது.
இதில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
தென்னிந்திய நடிகைகள் வரவழைப்பு
இது குறித்து அவர் தொடர்ந்தும் உரையாற்றுகையில், "தமிழ்ப் பிரதேசங்களில் தினம் தினம் போதை மரணங்கள் பதிவாகும் அளவுக்கு எமது இளைய தலைமுறை இன்று போதைப்பொருட்களுக்கு அடிமையாகிக் கொண்டிருக்கிறது.

போர் முடிவுக்குக் கொண்டுவரப்பட்ட நிலையில் இளைஞர்களை இலட்சியப் பாதைகளில் இருந்து திசை திருப்பும் நோக்கில் போதைப் பொருட்கள் திட்டமிட்டு விநியோகிக்கப்பட்டன.
இன்று அதைக் கைவிட முடியாத அளவுக்கு போதை பெரும் புற்று நோயாகத் தமிழ்ச் சமூகத்தை அரிக்க ஆரம்பித்து விட்டது. இது போதாது என்று, இப்போது திட்டமிட்டுத் தென்னிந்தியாவில் இருந்து நடிகைகள் வரவழைக்கப்படுகின்றனர்.
களியாட்ட நிகழ்ச்சிகள்
இதுவும் தமிழ்ச் சமூகத்தைப் போதை மயப்படுத்தும் இன்னுமொரு நிகழ்ச்சி நிரலே.கஞ்சா, மாவா, ஐஸ் மற்றும் ஹெரோயின் மாத்திரம் போதைப்பொருட்கள் அல்ல. மதியை மயக்கும் எல்லாமே போதைகள் தான்.

அந்தவகையிலேயே, எமது இளைஞர்களை குறிவைத்து நடிகைகளின் களியாட்ட நிகழ்ச்சிகள் ஒழுங்கு செய்யப்படுகின்றன. இவை தொடர்ந்து நிகழுவதைத் தவிர்க்கும் முயற்சிகளில் தமிழ்ச் சமூகத்தின் நலனில் அக்கறையுள்ள அனைவரும் ஈடுபடவேண்டும்.
போரினால் பாதிக்கப்பட்ட எமது மக்களின் உள ஆற்றுப்படுத்தலுக்குப் பொழுது போக்குகள் அவசியம். ஆனால், அந்தப் பொழுதுபோக்குகள் பண்பாட்டுச் சீரழிவுக்கு வித்திடுபவையாக இருக்கக் கூடாது.
இனத்தின் பண்பாட்டு அடையாளங்கள்
பண்பாடு என்பது ஒரு இனத்துக்குத் தனித்துவமான, அந்த இனம் தன்னை யார் என்று உணர்ந்து கொள்ளவும், மற்றவர்களுக்குத் தன்னை யார் என்று அடையாளப்படுத்தவும் கூடிய ஒரு வாழ்க்கை முறை.

இன ஒடுக்குமுறைகளுக்கு எதிராகப் போராடிக் கொண்டிருக்கின்ற நாம் எமது இனத்தின் பண்பாட்டு அடையாளங்களை எந்தக் கேளிக்கைளின் பொருட்டும் இழந்து விடக்கூடாது. நாமும் நமக்கென்று பல கலைகளைக் கொண்டிருக்கிறோம்.
அவற்றை மேடையேற்ற உணர்வுள்ள மனம் படைத்தவர்கள் முன்வர வேண்டும்" என சுட்டிக்காட்டியுள்ளார்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
அன்புக்கரசி வலையில் சிக்கிய தர்ஷன், பார்கவி சொன்ன விஷயம்.. எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam
அமெரிக்க ஒப்பந்தத்தை மறுத்தால் ஜெலென்ஸ்கி கொல்லப்படலாம்... ரஷ்யாவில் இருந்து கசிந்த தகவல் News Lankasri