மலையில் மோதிக்கொண்டு மண்டையினை உடைப்பது சாணக்கியம் அல்ல! - ஹாபீஸ் நஸீர் அகமட்
இருக்கின்ற சூழலில் யதார்த்தங்களை புரிந்து கொள்ளாமல் மலையில் மோதிக்கொண்டு மண்டையினை உடைப்பது எனது சாணக்கியம் அல்ல என நாடாளுமன்ற உறுப்பினர் ஹாபீஸ் நஸீர் அகமட் தெரிவித்துள்ளார்.
அத்துடன் மலையினை தோண்டி வெளிவருவதே எனது செயற்பாடாகும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அவரது அலுவலகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் வைத்தே இந்த விடயத்தை கூறியுள்ளார்.
மேலும் தெரிவிக்கையில்,
நாங்கள் இருபதுக்கு வாக்களித்ததன் பின்பு இந்த அரசாங்கம் இதே அமைச்சரவை அங்கு இது பேசப்பட்டு அதற்கான உத்தரவு வழங்கப்பட்டிருந்தது. அது எவ்வாறு சீரழிக்கப்பட்டது என்பதைப் பற்றி நான் இங்கு பேச விரும்பவில்லை.
அரசாங்கம் ஒரு கட்டத்திலே இதற்கு முன்பு இதனை முடிவுக்குக் கொண்டுவரவேண்டும் என்பதிலே அமைச்சரவையிலே தெளிவான முடிவைக் கொடுத்திருந்தது.
நாங்கள் பேச்சுவார்த்தையிலே எல்லோருடனும் ஈடுபட்டிருந்த காரணத்தினால் முக்கியமாக இந்த நாட்டினுடைய தலைவர்கள் இதனைச் செய்ய வேண்டும் என்பதிலே உறுதியாக இருந்தார்கள். அதன் பின்பு வந்த நிலைப்பாடுகளில் இதுவும் ஒரு அங்கமாகின்றது.
எத்தனையோ பேர் வீதியில் இறங்கிப் போராடியதிலிருந்து ஐக்கிய நாடுகள் சபைக்குக் கொண்டு செல்லப்பட்டது வரை பல விடயங்கள் நடைபெற்றிருந்தாலும், நாங்கள் இந்த நாட்டிலே சுதந்திரம் கிடைத்த நாளிலிருந்து எங்களுடைய தமிழ் சகோதரர்கள் பல போராட்டங்களை நடத்தி வருகின்றார்கள்.
இன்னும் எந்தவித பதிலும் கிடைக்காத பல கேள்விகள் எங்களுக்குள் இருக்கின்றது. இதுதான் இந்த நாட்டினுடைய யதார்த்தம்.
ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் ஆணையகத்தில் பேசப்பட்டு வருகின்ற பல விடயங்களுக்குக்கூட இன்னும் தீர்வில்லாமல் இருக்கின்ற இந்த வேலையில்தான் உங்களுடைய இந்தக் கேள்வியை நானும் பார்க்கின்றேன்.
நாங்கள் ஒரு விடயத்தில் நம்பிக்கை வைத்திருந்தோம்.நாங்கள் 20இற்கு ஆதரவளித்தது என்ற விடயத்தை இரண்டு விடயங்களாக நான் பார்க்கின்றேன்.
ஜனாஸா விடயம் ஒரு நிபந்தனையாக நாங்கள் கூறிய விடயமே தவிர ஜனாஸா விடயத்திற்கும் 20ற்கும் எந்த சம்பந்தமும் கிடையாது.
இதனை விடயம் தெரிந்த அரசியல் ஞானம் உள்ளவர்கள் புரிந்துகொள்ள வேண்டும். கடந்த நான்கு மாதங்களில் நாங்கள் சரியான உறக்கமில்லாமல் பலர் எங்களை ஒரு கேலிக்கூத்தாக பார்க்கின்றளவிற்கு அரசியல் செய்யத் தொடங்கி விட்டார்கள்.
அவர்களின் இயலாத தன்மையையும், வாக்களித்த நாங்கள் ஜனாதிபதி, பிரதமர் தொடக்கம் இதில் சம்பந்தப்பட்ட அமைச்சர்கள் அனைவரையும் தொடர்ச்சியாக எங்களுடைய முயற்சிகளையும் செய்திருந்தோம்.
இவ்வாறானதொரு விடயத்தைச் செய்வதற்குக்கூடப் பல விடயங்கள் ஏற்கனவே செய்யப்பட்டிருக்கின்றது. ஓட்டமாவடியில் ஜனாஸாவை இன்று அடக்கம் செய்கின்றோமானால் அது நேற்று எடுத்த தீர்மானமல்ல.
அடக்கம் செய்வதற்கான அறிக்கைகள் அனைத்தையும் அரசாங்கத்தின் அனுசரணையோடு ஏற்கனவே செய்து வைத்திருந்தோம். அரசாங்கத்தின் அனுசரணை இருந்திருக்காவிட்டால் அவர்கள் ஏற்கனவே அதனை நிராகரித்திருக்க முடியும்.
ஜனாஸாவை எரிக்கின்ற விடயம் எந்தவொரு முஸ்லிமும் மனதால்கூட நினைத்துப் பார்த்திருக்காத விடயமாகும்.
நாட்டின் அரசியல் சூழ்நிலையினை அறிந்து காய்நகர்த்தவேண்டிய பொறுப்பு அரசியல் தலைமைகளுக்கு இருக்கின்றது.
நாட்டில் இன்று இருக்கின்ற பேரினவாதத்திற்குள் பேரினவாதம், இனவாதத்திற்குள் இனவாதம் உள்ளது. இன்று பல்வேறு கோணங்களில் இருக்கின்ற விடயங்களைத் தமிழ் பேசும் சமூகம் கவனத்தில் கொண்டுதான் காய்நகர்த்தவேண்டிய தேவையிருக்கின்றது. இந்த ஆட்சியாளர்களுள் பல நல்லவர்கள் உள்ளனர்.
ஒட்டுமொத்தமாக நாங்கள் ஆட்சியாளர்களை உதாசீனம் செய்துவிட்டுச் செல்லமுடியாது. தீவிரமாகச் சிந்திக்கின்ற கூட்டம் அனைத்து இடங்களிலும் உள்ளது.
தமிழ் பேசும் சமூகமாக இருக்கின்ற நாங்கள் அவற்றினை எவ்வாறு இராஜதந்திர ரீதியில் அணுகுவது தொடர்பான நடவடிக்கைகளைக் கையிலெடுக்கவேண்டிய தேவையுள்ளது.
நாங்கள் பாக்கிஸ்தான் பிரதமர் இம்ரான்கானைச் சந்தித்தபோது இராஜதந்திரமாக காய்நகர்த்துவது தொடர்பிலும் ஒரு கலந்துரையாடல் நடைபெற்றது.
இவ்வாறு இருக்கின்ற சூழலில் யதார்த்தங்களைப் புரிந்துகொள்ளாமல் மலையில் மோதிக் கொண்டு மண்டையினை உடைப்பது எனது சாணக்கியம் அல்ல.
மலையினை தோண்டி வெளிவருவதே எனது செயற்பாடாகும். மலையில் மோதினால் எங்களது தலையே இல்லாமல் போகும். அதற்காக அடங்கி ஒடுங்கி இருக்கவேண்டும் என்பதல்ல. கடந்த 72 வருடங்களாக மாறிமாறி ஆட்சிக்கு வந்த அரசுகளுக்குள்ளும் தமிழ் பேசும் சமூகம் ஒவ்வொரு பிரச்சினையை எதிர்கொண்டே வந்துள்ளது.
ஜே.ஆர்.ஜயவர்த்தனவின் காலப்பகுதியில் தான் இந்த நாட்டில் பாரிய கலவரம் வெடித்தது. பிரேமதாசவின் காலத்தில்தான் மிகப்பெரும் இனச் சுத்திகரிப்பாக வடக்கிலிருந்து முஸ்லிம்கள் வெளியேற்றப்பட்டனர்.
எந்த ஆட்சியாளர் காலத்திலும் தமிழ் பேசும் சமூகம் சுமுகமாக வாழ்ந்த வரலாறு இந்த நாட்டில் இல்லை. கடந்த நல்லாட்சி காலத்தில் பள்ளிவாசல்களுக்குள் நாய் செல்லும்போது பார்த்துக்கொண்டுதான் இருந்தோம்.
எத்தனையோ முஸ்லிம்கள் சித்திரவதை செய்யப்பட்டு சிறையில் வாடுகின்றனர். இதே நல்லாட்சி அரசாங்கத்திலேயே நடைபெற்றது. அனைத்தையும் மூடிமறைத்து விட்டுப் பேசாமல் இருக்கமுடியாது.
ரணில் விக்ரமசிங்கவின் ஆட்சியான 2002ஆம் ஆண்டு ஓட்டமாவடியில் இரண்டு ஜனாசாக்களை எரித்தபோது விசேட அதிரடிப்படையினர் அதனைப் பார்வையிட்டுக் கொண்டிருந்தனர்.
அப்போது கண்ணுக்கு முன்னுக்கு ஜனாசா எரிக்கப்பட்டபோது பார்த்துக்கொண்டிருந்தார்கள்.
அதேபோன்று தமிழ் மக்களும் பல வேதனைகளை எதிர்கொண்டார்கள். ஒவ்வொரு ஆட்சியிலும் முன்னெடுக்கப்படும் இவ்வாறான செயற்பாடுகளை நாங்கள் எப்படி மாற்றுவது அல்லது அதனை எவ்வாறு எதிர்கொள்வது என்பதையே நாங்கள் சிந்திக்கவேண்டும். அபிவிருத்திக்குழுவில் தான் மக்களின் பிரச்சினைகள் முழுமையாகப் பேசப்படுகின்றது.
அபிவிருத்திக்குழுவின் ஊடாகத்தான் இந்த அரசாங்கம் முழு அபிவிருத்தி செயற்றிட்டங்களையும் செய்யப்போகின்றது. இதன் ஊடாக பாரியளவிலான வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்படவுள்ளன.மக்களின் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்காகவே இந்த நாடாளுமன்றம் சென்றேன்.
அவ்வாறு இதன் மூலம் மக்களின் பிரச்சினை தீர்க்கமுடியாவிட்டால் நாளைக்கே நான் பதவியை இராஜினாமா செய்து விடுவேன்.
மக்களின் பிரச்சினை தீர்க்க முடியாத நாடாளுமன்ற உறுப்பினராக நான் ஒரு நாளும் இருக்கமாட்டேன்.
20ஆவது திருத்தம் இந்த நாட்டில் தமிழ் பேசும் மக்களாக இருக்கின்ற எங்களுக்கு முழு அதிகாரம் கொண்ட ஜனாதிபதி தேவையென்னும் விடயத்தில் நான் தெளிவாக இருக்கின்றேன்.
அதனை எங்கள் கட்சியின் மறைந்த தலைவர் அஸ்ரப் அவர்களும் விரும்பியிருந்தார். கடந்த நல்லாட்சியில் எத்தனையோ ஆணைக்குழுக்களை அமைத்திருந்தனர்.
தமிழ் பேசும் சமூகத்தில் யாருக்காவது அந்த ஆணைக்குழுவிலிருந்தவர்களையாவது தெரியுமா? அவர்களை யார் நியமித்தது? அவர்கள் வேறு நாடுகளிலிருந்து வந்தவர்களா?
அவர்களுக்கு அதிகாரத்தைக் கொடுத்தால் மூன்று நான்கு மாதங்களுக்கு மாற்ற முடியாது அந்த இழுபறியில் இந்த நாடு பட்ட சீரழிவை நாங்கள் கண்டோம். எந்தவொரு விடயத்தையும் நகர்த்த முடியாமல் போனது.
மத்திய வங்கி கொள்ளையில்கூட ஒருவரையும் பிடிக்க முடியாமல் போய்விட்டது. குண்டுத் தாக்குதலின்போது கூட யார் ஆட்சி செய்வது என்று தெரியாத நிலையில் பரிதாபமாக அத்தனை மக்களும் கொல்லப்பட்டதுடன், முஸ்லிம்கள் பயங்கரவாதிகள் என்ற முத்திரை குத்தப்பட்டதும் இவர்களின் இழுபறியினால் தான்.
அதிகார இழுபறியின் காரணமாக நடந்த விடயங்கள் இவையாகும். ஆகக் குறைந்தது தமிழ் பேசும் இனத்தினுடைய ஒட்டுமொத்த பிரச்சினை தீர்ந்திருந்தால்கூட பரவாயில்லை.
கவலையான விடயம் இருந்த மாகாணசபை தேர்தலைக்கூட நல்லாட்சி பிற்போட்டதாகும். அதுகூட இல்லாமல் போய்விடுமா என்று அஞ்சுகின்றோம். காணி சீர்திருத்தம், எல்லைப் பிரச்சினை என எத்தனை வருடங்களாக இந்த நல்லாட்சி கதைத்துக்கொண்டிருந்தது.
ஆணைக்குழுக்களை அமைத்து ஒரு அறிக்கையை ஒரு நாளில் ஒருவராலும் முடிக்க முடியாமல் போனது. தீர்மானம் எடுக்க முடியாமல் போனது. எங்களுக்குத் தேவை எழுத்திலிருக்கின்ற விடயங்களல்ல.
நல்லாட்சியின் நான்கரை வருட ஆட்சியில் வெறுமனே பயங்காட்டப்பட்ட விடயங்களே தவிர எந்தவொரு நல்ல விடயமும் தமிழ் பேசும் சமூகத்திற்கு நடக்கவில்லை. ஆகக் குறைந்தது கைதிகளையாவது விடுதலை செய்திருக்கலாம். கண்துடைப்பிற்காக சில காணிகளை விடுவித்தனர்.
நாங்கள் இதுவரை காலமும் பேசிக்கொண்டு வருகின்ற தமிழ் பேசும் சமூகத்தினுடைய அரசியல் அதிகாரம் என்று சொல்கின்ற அத்தனை விடயத்திற்கும் ஒரு புதிய அரசியலமைப்பு கொண்டுவரப்பட்டுள்ளதாக முதலாவது பேச்சிலேயே ஜனாதிபதி சொல்லியிருந்தார்.
அதற்கடுத்ததாக பிரதமர் ரணில் சொல்லியிருந்தார். பெரிய குழுவை அமைத்தார்கள். என்ன அந்த புதிய அரசியலமைப்பு? நான்கரை வருடங்களாக ஒன்றை முடிக்க முடியாத அந்த நல்லாட்சி அரசாங்கம் சாதித்தது என்ன? அந்த அதிகாரப் பகிர்வு சாதித்தது என்ன? சிலவேளை மைத்திரிபால சிறிசேன அவர்களுக்கு அதிகாரம் இருந்திருந்தால் முடித்திருப்பார்.
எங்களுடைய மறைந்த தலைவர் அஷ்ரஃப் அவர்கள் வெட்டுப்புள்ளியை 12வீதத்திலிருந்து 5 வீதத்திற்குக் கொண்டு வந்தாரென்றால் அது அதிகாரமுள்ள ஜனாதிபதி இருந்ததால் மாத்திரமே செய்ய முடிந்தது. நாடாளுமன்றத்திற்குக் கொண்டு சென்றுதான் மாற்றவேண்டும் என்றால் அது நடந்திருக்காது.
அதிகாரமுள்ள ஜனாதிபதி மக்களால் தெரிவு செய்யப்படுகின்றார் தந்தை செல்வா தொடக்கம் எத்தனையோ தமிழ் தலைவர்கள் எத்தனையோ விடயங்களை நாடாளுமன்றத்தில் பேசியிருக்கின்றார்கள். எதற்காவது ஒரு தீர்வை கண்டிருப்பார்களா?
ஆகக் குறைந்தது ஒருவரிடம் பேசி இந்த விடயத்தை முடிக்கலாம் என்று ஒருவர் இருக்கின்றபோது பத்து குழுக்களை அமைத்து அதில் யார் இருக்கின்றனர் என்று தெரியாது, அவரிடம் நாங்கள் பேசவும் முடியாது. அவர்களும் பெரும்பான்மை சமூகத்தவர்கள் தான்.
தமிழ் பேசும் சமூகத்தினருடைய பிரச்சினையைத் தீர்ப்பது தான் எங்களுடைய அரசியலாகும். நாங்கள் ஏன் நாடாளுமன்றத்திற்குச் சென்று பிரதிநிதித்துவத்தைப் பற்றிக் கதைக்கின்றோம்.
தமிழ் பேசும் சமூகத்தினருடைய பிரச்சினையைத் தீர்க்க வேண்டும் என்பதற்காகவே. எங்களுடைய எத்தனையோ பிரச்சினைகள் தீர்க்கப்படாமலே பேச்சுவார்த்தையாகவே போய்விட்டது எனது தெரிவித்துள்ளார்.

Jurassic World Rebirth 13 நாட்களில் இத்தனை ஆயிரம் கோடிகள் வசூலா, இதை அழிக்கவே முடியாது போல Cineulagam

பிரபல இயக்குனர் வேலு பிரபாகரன் கவலைக்கிடம்! இறந்துவிட்டதாக பரவிய செய்தி பற்றி குடும்பத்தினர் விளக்கம் Cineulagam

சாட்ஜிபிடி உதவியால் 46 நாட்களில் 11 கிலோ எடை குறைத்த நபர் - என்ன உணவுகள் எடுத்து கொண்டார்? News Lankasri
