குடிநீர் அபிவிருத்தி சபையினரின் பணிப்பகிஷ்கரிப்பு (Video)
காரைநகர் குடிநீர் அபிவிருத்தி சபையினர் பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபட்டுள்ளனர்.
டீசல் இன்மையால் இன்றிலிருந்து டீசல் கிடைக்கும் வரை பணிப்பகிஷ்கரிப்பிலும் கவனயீர்ப்பு போராட்டத்திலும் ஈடுபடுவதாக தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பாக குடிநீர் அபிவிருத்தி சபையினர் கருத்து தெரிவிக்கையில்,
“நாங்கள் கடந்த 17 ஆண்டுகளாக காரைநகர் பகுதி முழுவதும் குடிநீர் விநியோகத்தில் ஈடுபடுகின்றோம்.
எரிபொருள் நெருக்கடியின் பாதிப்பு
அண்மைக்காலமாக ஏற்பட்ட எரிபொருள் நெருக்கடியின் போது அரசாங்க அதிபர் மற்றும் காரைநகர் பிரதேச செயலாளரின் பரிந்துரை மூலம் காரைநகர் இ.போ.ச டிப்போவால் எமக்கு சீரான எரிபொருள் விநியோகம் நடைபெற்றது.
எனினும், இனிமேல் எமக்கு எரிபொருளை வழங்க முடியாது என டிப்போ அறிவித்துள்ளது. இதையடுத்து சீரான குடிநீர் விநியோகம் செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
குடிநீர் என்பது மிகவும் அத்தியாவசியமான ஒன்றாகும். இந்த நிலையில் சுத்தமான குடிநீர் என்பது காரைநகர் பகுதியில் கிடைக்காது. ஆகவே நாங்கள் வெளியில் இருந்தே குடிநீரை எடுத்துவந்து விநியோகம் செய்கின்றோம்.
சில நாட்களுக்கு முன்னர் இவ்வாறு குடிநீரை எடுப்பதற்கு நாங்கள் வெளியே சென்றிருந்தவேளை பிரதேச செயளாலர் எம்மை அழைத்து டீசலை பெற்றுகொள்ளுமாறு கூறியிருந்தார்.
நாங்கள் வெளியே நின்றதன் காரணமாக எரிபொருள் வழங்கிய நிலையத்திற்கு உடனடியாக எம்மால் வருகைதர முடியவில்லை. ஆகையால் எமக்காக ஒதுக்கப்பட்டிருந்த எரிபொருளானது விநியோகம் செய்யப்பட்டுள்ளதாக பிரதேச செயலாளர் தெரிவித்துள்ளார்.
இந்த நிலையை கருத்தில் கொண்டு எமக்கான எரிபொருளை வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்” என தெரிவித்துள்ளனர்.
பிரதேச செயலாளரின் கருத்து
இது தொடர்பில் காரைநகர் பிரதேச செயலாளர் கூறியதாவது,
”தண்ணீர் பேழைகளுக்கான டீசலை எரிபொருள் நிரப்பு நிலையத்தில் வைத்துக்கொண்டு அவற்றினை பெற்றுக்கொள்ளுமாறு அவர்களுக்கு தொலைபேசி மூலம் கூறினேன். ஆனால் அவர்கள் வந்து அந்த டீசலை பெற்றுக்கொள்ள வில்லை.
எரிபொருள் நிலையத்தில் வரிசையில் நின்றவர்கள் தமக்கு எரிபொருளை வழங்குமாறு கூறி வாதிட்டதால் வரிசையில் நின்றவர்களுக்கு டீசல் வழங்கப்பட்டது. ஆகையால் குடிநீர் விநியோகம் செய்பவர்களுக்கு டீசலை வழங்க முடியவில்லை.
அடுத்த கட்டம் டீசல் கிடைக்கும்போது குடிநீர் விநியோகம் செய்வோருக்கு முனுரிமைப்படுத்தி டீசலை வழங்குவோம்” என கூறியுள்ளார்.