சர்ச்சையில் சிக்கிய போரிஸ் ஜோன்சனுக்கு எதிராக வலுக்கும் கடும் எதிர்ப்பு
பிரித்தானிய அரசியலில் கடந்த சில நாட்களாக பெரும் பரபரப்பை ஏற்படுத்திய பிரதமர் பணியகத்தில் இடம்பெற்ற கோவிட் முடக்க கால விருந்துகளை மையப்படுத்தி விசாரணை இன்று வெளியிடப்பட்டுள்ள நிலையில், பிரதமர் பதவியில் இருந்து போரிஸ் ஜோன்சன் விலக வேண்டும் என்ற கோரிக்கைகள் வலுப்பெற ஆரம்பித்துள்ளன.
குறிப்பாக இந்த விருந்துபசாரங்களை நடத்திய விவகாரத்தில் தலைமைத்துவ தோல்வி ஏற்பட்டுள்ளதாக விசாரணை அதிகாரி சூ கிறே சுட்டிக்காட்டியுள்ள நிலையில், பிரதமர் போரிஸ் ஜோன்சனுக்கு இந்த அறிக்கை மேலும் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது.
பிரித்தானியாவில் பொது முடக்க நிலை நடைமுறையில் இருந்த காலப்பகுதியில் பிரதமர் அலுவலகத்தில் விருந்துபசாரங்கள் நடத்தப்பட்டமை தொடர்பில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட அரச அதிகாரி சூ கிறேயின் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
குறிப்பாக பொதுமக்களிடம் கடைப்பிடிக்குமாறு கோரிய விடயங்களை அரசாங்க ஒன்றுகூடல்களில் பின்பற்றுவதில் பாரதூரமான தோல்விகள் ஏற்பட்டுள்ளதாக சூ கிறே தனது விசாரணையில் கண்டறிந்துள்ளார்.
பிரதமர் அலுவலகத்தின் வேறுபட்ட பிரிவுகள் மற்றும் அமைச்சரவை அலுவலக கணிப்பு மற்றும் தலைமைத்துவ தவறுகள் இடம்பெற்றுள்ளதாகவும் சூ கிறே கூறியுள்ளார்.
அவர்கள் செய்ததை போன்ற ஒன்றுகூடல்களையும் ஏனைய பல ஒன்றுகூடல்களை அனுமதித்திருக்க கூடாது எனவும் அவர் தனது அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளார்.
தமது விசாரணைகளில் உள்ளடக்கப்படும் விடயங்கள் குறித்து குறைந்தபட்ச குறிப்பையே உள்ளடக்குமாறு பெருநகர காவல்துறையினர் கோரியிருந்த நிலையில், இதுவொரு ஆரம்ப அறிக்கையாகவே பார்க்கப்படுகின்றது.
இந்த அறிக்கை பகிரங்கமானதையடுத்து பிரதமர் போரிஸ் ஜோன்சனை பதவி விலகுமாறு எதிர்கட்சிகளும் அவரது சொந்தகட்சி தரப்பினுரும் கோரிக்கை விடுத்துள்ளனர்.முதலில் பிரதமர் பணியகத்திடம் கையளிக்கப்பட்ட இந்த அறிக்கை அரசாங்கத்தின் அதிகாரபூர்வ இணையத்தளத்தில் தரவேற்றப்பட்டுள்ளது.