2021 புக்கர் பரிசுக்கான நீண்ட பட்டியலில் இடம்பிடித்த இலங்கை எழுத்தாளரின் நூல்
2021 புக்கர் பரிசுக்கான நீண்ட பட்டியலில் இலங்கையின் எழுத்தாளர் அனுக் அருட்பிரகாசம் எழுதிய ‘ஒரு பாதை வடக்கு’ என்ற நூலும் உள்ளடக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அண்மைய வாரங்களில் இலங்கையின் எழுத்தாளர்கள், தங்கள் இலக்கியப் படைப்புகளுக்காக வெளிச்சத்திற்கு வந்துள்ளனர்.
இந்த அறிவிப்பு இலங்கையின் வளர்ந்து வரும் இலக்கிய திறமைகளின் கவனத்தை மீண்டும் பிரகாசிக்க செய்து வருகிறது. "கிராண்டா புக்ஸ்" வெளியிட்ட அருட்பிரகாசத்தின் நூலில், ஆசை, உள்நாட்டுப் போரின் இழப்பு, மரபு, இலங்கையில் போரினால் பாதிக்கப்பட்ட வடக்கின் ஒரு இளைஞனின் பயணக் கதையை விபரிக்கிறது.
"புக்கர்" பரிசு மற்றும் இலக்கிய நோபல் பரிசு வென்ற கசுரோ இஷிகுரோ போன்ற புகழ்பெற்ற எழுத்தாளர்களின் 13 நூல்களைக்கொண்ட நீண்ட பட்டியலில் அனுக் அருட்பிரகாசத்தின் நூலும் உள்ளடங்கியுள்ளது.
தீர்ப்புக் குழுவில் வரலாற்றாசிரியர் மாயா ஜசனோஃப், எழுத்தாளரும் ஆசிரியருமான ஹொராஷியா ஹரோட், நடிகர் நடாஷா மெக்ல்ஹோனெம், இரண்டு முறை புக்கர் குறுகிய பட்டியலில் இடம்பெற்ற நாவலாசிரியர் மற்றும் பேராசிரியர் சிகோசி ஒபியோமா, எழுத்தாளர் மற்றும் முன்னாள் பேராயர் ரோவன் வில்லியம்ஸ் ஆகியோர் அடங்குகின்றனர்.
இந்தநிலையில் புக்கர் பரிசுக்கான ஆறு நூல்களின் குறுகிய பட்டியல் செப்டம்பர் 14 ஆம் திகதி அறிவிக்கப்படவுள்ளது. வெற்றியாளர் இந்த ஆண்டு நவம்பர் 2 ஆம் திகதியும் அறிவிக்கப்படவுள்ளார்.
புக்கர் பரிசு (Booker Prize) அல்லது புனைவுகளுக்கான மான் புக்கர் பரிசு (Man Booker Prize for Fiction), ஆங்கில மொழியில் எழுதப்படும் சிறந்த முழுநீள புதினங்களுக்கு வழங்கப்படும் பரிசாகும்.
பொதுநலவாய நாடுகளை அல்லது அயர்லாந்துக் குடியரசைச் சேர்ந்தவர்களால் எழுதப்படும் புதினங்களுக்கே இந்தபரிசு வழங்கப்படுகின்றது. இது 1968 ஆம் ஆண்டு இது ஆரம்பிக்கப்பட்டது.
இலக்கியத்துக்காக வழங்கப்படும் பரிசுகளில் உலகிலேயே பலரும் அறிந்த பரிசுகளில் ஒன்றான புக்கர் பரிசு, புனைவு இலக்கிய எழுத்தாளர்களுக்குக் கிடைக்கக்கூடிய மிக உயர்ந்த பெருமைகளில் ஒன்றாக கருதப்படுகின்றது.

