கட்டுநாயக்க வந்த விமானத்திற்கு போலி வெடிகுண்டு அச்சுறுத்தல் - பொலிஸார் விசாரணை
தோஹாவிலிருந்து கட்டுநாயக்க வந்த விமானத்தில் சந்தேகத்திற்கிடமான நபர்கள் பலர் இருப்பதாக கிடைத்த தகவலின் பேரில், சிறப்பு சோதனை நடத்தப்பட்டுள்ளது.
இதனையடுத்து விமானம் கட்டுநாயக்க விமான நிலைய முனையத்திற்கு கொண்டு செல்லப்பட்டு மதியம் 1.07 மணிக்கு கட்டாரின் தோஹாவிற்கு புறப்பட்டுள்ளது.
வெடிகுண்டு அச்சுறுத்தல்
இந்த சம்பவம் கடந்த 26 ஆம் திகதி கண்டி மாவட்ட செயலக வளாகத்தில் வெடிகுண்டு இருப்பதாக வந்த செய்தியை போலவே ஒரு போலியான செய்தி என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பில் பொலிஸார் நடத்திய முதற்கட்ட விசாரணையில், தொடர்புடைய இரண்டு மின்னஞ்சல்களும் வெளிநாட்டிலிருந்து நாட்டிற்கு அனுப்பப்பட்டிருப்பதும் தெரியவந்துள்ளது.
இதுபோன்ற நாசவேலைகளில் ஈடுபடும் நபர்களை அடையாளம் காண குற்றப் புலனாய்வு பிரிவு மற்றும் புலனாய்வு அமைப்புகள் சிறப்பு விசாரணையை தொடங்கியுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
வெடிகுண்டுப்பிரிவு சோதனை
தோஹாவில் உள்ள ஹமாத் சர்வதேச விமான நிலையத்திலிருந்து இன்று(28) அதிகாலை 1.44 மணியளவில் புறப்பட்டு கட்டுநாயக்காவில் உள்ள பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்த விமானத்திற்குள் குண்டுகள் இருப்பதாக மின்னஞ்சல் மூலம் அச்சுறுத்தல் விடுக்கப்பட்டிருந்தது.

குறித்த விமானத்தில் 245 பயணிகள், 10 பணியாளர்கள் மற்றும் இரண்டு விமானிகள் இருந்த நிலையில், விமானம், தரையிறங்கிய பின்னர் விமானப்படையின் வெடிகுண்டுப் பிரிவு சோதனை செய்தது.
இந்நிலையில், விமானத்தில் குண்டுகள் அல்லது சந்தேகத்திற்குரிய எதுவும் இல்லை என்று மூத்த பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.