பாகிஸ்தானில் மனித வெடிகுண்டுத் தாக்குதல்: 9 பொலிஸார் பலி; 15 பேர் படுகாயம்
பாகிஸ்தானில் இடம்பெற்ற மனித வெடிகுண்டுத் தாக்குதலில் 9 பொலிஸார் உயிரிழந்துள்ளதுடன், 15 பேர் படுகாயமடைந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளார்.
இச்சம்பவம் பலூசிஸ்தான் மாகாணத்தின் போலான் நகரில் இன்றைய தினம் (06.03.2023) இடம்பெற்றுள்ளது.
மோட்டார் சைக்கிளொன்றில் வேகமாக வந்த தற்கொலை குண்டுதாரி ஒருவர், பொலிஸ் வாகனம் மீது மோதியுள்ளார். இதில் அவர் வைத்திருந்த குண்டு வெடித்ததில் பொலிஸ் வாகனம் நொறுங்கியுள்ளது.
பலூசிஸ்தான் முதல்வர் கண்டனம்
இந்த வெடிப்பில் 9 பொலிஸார் உயிரிழந்துள்ளதுடன், 15 பேர் படுகாயமடைந்துள்ளதாகவும் படுகாயமடைந்தவர்களை மீட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
குறித்த தாக்குதலுக்கு எந்த அமைப்பும் பொறுப்பேற்கவில்லை எனவும் தெரிவிக்கப்படுகின்றது.
இந்தத் தாக்குதலுக்குப் பலூசிஸ்தான் முதல்வர் மிர் அப்துல் குதூஸ் பிசென்ஜோ (Mir Abdul Qudoos Bizenjo) கண்டனம் தெரிவித்துள்ளார்.
மேலும், பயங்கரவாத சக்திகளின் கோழைத்தனமான செயல்களின் மூலம், தீய நோக்கங்களை நிறைவேற்ற விரும்புவதாகக் கூறிய அவர், மாகாணத்தில் அமைதியின்மை மற்றும் உறுதியற்ற தன்மையை உருவாக்குவதன் மூலம் பலூசிஸ்தானை வளர்ச்சியடையாமல் வைத்திருக்க அவர்கள் சதி செய்கிறார்கள் என்றும் கூறியுள்ளார்.
பலூசிஸ்தானில் எரிவாயு மற்றும் கனிம வளங்களைச் சுரண்டுவதாகக் குற்றம் சாட்டி போராளிகள் குழு ஒன்று அரசாங்கத்துடன் சண்டையிட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
