இலங்கை பொலிஸ் தலைமையகத்துக்கு வந்த குண்டு தாக்குதல் எச்சரிக்கை
"இலங்கை பொலிஸ் தலைமையகத்துக்கு வந்த குண்டு தாக்குதல் எச்சரிக்கை! பள்ளிவாசல்களில் கடும் பாதுகாப்பு ஏற்பாடுகள்". இதுவே இந்த வாரம் பரபரப்பான சிங்கள தேசத்தின் செய்தி.
இப்படி ஒரு எச்சரிக்கை உண்மையில் வந்ததா? அப்படி ஒரு தாக்குதலை இஸ்லாமிய அடிப்படை வாதிகளால் இலங்கை தீவுக்குள் நடத்த முடியுமா? இலங்கை தீவிற்குள் இஸ்லாமிய தீவிரவாத தாக்குதலை இலங்கை பாதுகாப்பு படையை மீறி ஒருபோதும் நடத்த முடியாது என்பதுதான் உண்மை.
இலங்கை முஸ்லிம்கள் அதற்கேற்ற புவியியற் பலமும் அதற்கான தேர்ச்சியும், வினை திறனும் மிக்கவர்கள் கிடையாது. ஆகவே இந்தச் செய்தி பல நோக்கங்களை அடிப்படையாகக் கொண்டு திட்டமிட்டு உருவாக்கப்பட்டது என்பதே முடிந்த முடிவு. அப்படியானால் இதற்கான காரண காரியங்களை தேடுவது அவசியமானது.
கண்டி மாவட்டத்திலுள்ள அக்குரணையில் உள்ள பள்ளிவாசல் நிர்வாகத்துடன் பொலிஸ் உயர் அதிகாரிகள் 18ஆம் திகதி மாலை கலந்துரையாடல் ஒன்றை நடத்தியுள்ளனர்.
குண்டு தாக்குதல் எச்சரிக்கை
இதன்போது இந்த குண்டு தாக்குதல் பற்றியும் குண்டு தாக்குதல் எச்சரிக்கைக்கான ஒலிநாடா பற்றியும் குறிப்பிட்டதாக செய்திகள் வெளிவந்திருக்கின்றன.
இந்தச் செய்தி நான்கு வருடத்திற்கு முன் நடந்த ஈஸ்டர் குண்டு வெடிப்பும், இப்போது குறிப்பிடப்படும் ரமழான் குண்டு வெடிப்பு எச்சரிக்கையும் ஒரே மாதிரியான சாயலைக் கொண்டுள்ளன.
இதற்குள் ஆழமான நாசக்கார அரசியல் உண்டு. இந்தச் செய்தி இரண்டு உள்நோக்கங்களைக் கொண்டது.
ஒன்று முஸ்லிம் மக்களின் புனித நாளில் அவர்களை நிம்மதியாக அந்த நாளை கொண்டாடவிடாமல் குழப்புவது. அவர்கள் மீதான அழுத்தங்களை பிரயோகிப்பது. முஸ்லிம்களைத் தொடர்ந்து பயங்கரவாதிகள் என்ற கூட்டுக்குள் அடைப்பது. அதன் மூலம் தொடர்ந்து முஸ்லிம்கள் மீதும் இனப்படுகொலையை முன்னெடுப்பதன் ஊடாக இலங்கைத் தீவு சிங்களவர்களுக்கு உரியது என்கின்ற தம்மதீப கோட்பாட்டை நிலைநாட்டுவது.
இரண்டாவது இத்தகைய ஒரு குண்டு புரளியின் மூலம் சிங்கள பௌத்த ராட்சத தேசியவாதத்தை தொடர்ந்து உயிர்ப்புடன் பேணுவது.
அவ்வாறு உயிர்ப்புடன் பேணுவதன் மூலமே சிங்கள ஆளும் குழாம் தங்கள் பதவிகளை தொடர்ந்து தக்க வைக்க முடியும்.
எனவே தொடர்ந்து தங்கள் பதவிகளை தக்கவைக்கவும், சிம்மாசனத்தில் அமர்வதற்கும் சிறுபான்மை மக்கள் மீதான இனப்படுகொலை சிங்கள தேசத்துக்கு தேவையாகவே உள்ளது.
அதுவே கடந்த 75 ஆண்டுகால சிங்கள அரசியலின் சூத்திரமாகவும் உள்ளது. இன்று இலங்கை தீவில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியின் விளைவால் இலங்கை தீவை தொடர்ந்து ஆளும் சிங்கள உயர்குழாத்தின் அரசியல் கட்டமைப்புகள் சீர்குலைந்துள்ளன.
இதனால் சிங்கள தேசத்தில் எப்போதும் எந்நேரமும் மக்கள் கிளர்ச்சிகள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் தொடர்ந்தும் நிலவி வருகின்றது.
எனவே சிங்கள தேசத்தை தொடர்ந்து கட்டுப்பாட்டில் வைத்திருப்பதற்கும், தற்போது நாடாளுமன்றத்தில் கொண்டுவரப்படவிருக்கும் புதிய பயங்கரவாத தடைச் சட்டத்தை நிறைவேற்றுவதற்குமான ஆதரவு சிங்கள மக்களிடம் இருந்து பெறப்பட வேண்டும்.
இந்நிலையில் இலங்கைத் தீவையும் அரசியலையும் ஒரு பதட்டத்திலும் கொதிநிலையிலும் வைத்திருக்க வேண்டிய தேவை ஆளும் குழாத்துக்கு ஏற்பட்டிருக்கிறது.
இன்றுள்ள இலங்கையின் பாதுகாப்பு கட்டமைப்பு எத்தகைய தாக்குதல் அச்சுறுத்தலையும் எதிர்கொள்ளக்கூடிய சக்தி வாய்ந்ததும் வினைத்திறன் மிக்கதுமாகும்.
அத்தோடு இலங்கை ஒரு தீவாக இருப்பதனால் இலங்கைத் தீவுக்குள் பயங்கரவாத தாக்குதலையோ அல்லது கிளர்ச்சிகளையோ இலங்கை பாதுகாப்பு படைகளின் கட்டுக்காவலை மீறி யாராலும் செய்திட முடியாது. 2019 ஆண்டில் நடத்தப்பட்ட ஈஸ்டர் குண்டு வெடிப்பில் பயன்படுத்தப்பட்ட வெடிபொருட்கள், வாகனங்கள் இலங்கை பாதுகாப்புத் துறைக்கு சொந்தமானவை.
பயங்கரவாத தாக்குதல்
அத்தோடு அந்தக் குண்டுத் தாக்குதலில் ஈடுபட்டவர்கள் இலங்கை ராணுவ புலனாய்வுத்துறையில் பயிற்சி பெற்ற முகவர்கள் என்பதும் திட்டவட்டமாக நிரூபிக்கப்பட்டுள்ளது.
இலங்கை ஒரு தீவாக இருப்பதனால் இலங்கை தீவுக்குள் முஸ்லிம்களால் வெடிபொருட்களையோ, ஆயுதங்களையோ கடல் மார்க்கமாக கொண்டு வந்து சேர்க்க முடியாது. இஸ்லாமிய நாடுகளில் இருந்து வங்கக்கடல் ஊடாகவோ, அரபிய கடலூடாகவோ ஆயுதங்களை கொண்டு வரக்கூடிய வல்லமை வாய்ந்த கடலோடிகள் இலங்கை முஸ்லிம்களிடம் இன்று இல்லை.
இன்றைய கண்காணிப்பு வலைப்பின்னலில் இப்பெருங் கடலைக் அவர்களால் கடக்கவும் முடியாது. எனவே இலங்கை தீவுக்குள் இஸ்லாமியர்களினால் ஒரு ஆயுதப் போராட்டத்தையோ அல்லது பயங்கரவாத தாக்குதலையோ தனித்து ஒருபோதும் நடத்த முடியாது. எனவே இப்போது ஊடகங்களில் பரபரப்பாக செய்திகளை கசிய விடுவது என்பது இஸ்லாமியர்களை இத்தீவினுள்ளே ஒடுக்குவதுதான்.
இதன் முதல் கட்ட நடவடிக்கை கடந்த 2019ஆம் ஆண்டு ஈஸ்டர் குண்டு தாக்குகளுடன் ஆரம்பமாகிவிட்டது.
கடந்த 2009 இல் முள்ளிவாய்க்கால் இனப்படுகொலையுடன் இலங்கை தீவுக்குள் ஈழத் தமிழரின் ஆயுதப் போராட்டம் முற்றாக முடக்கப்பட்டு விட்டது. இனி ஈழத் தமிழர்களால் இலங்கை தீவுக்குள் ஒரு ஆயுதப் போராட்டத்தைதமிழகத்தின் பின்னணியின்றி ஒருபோதும் நடத்த முடியாது.
தொடர் முப்பது ஆண்டுகால ஆயுதப் போராட்டத்தினால் தமிழர் தாயகத்தில் தமிழ் மக்களின் சனத்தொகை படிமுறையாக தொடர்ந்த வீழ்ச்சி அடைந்து வருகிறது. பெருமளவில் ஈழத்தமிழர்கள் தாயகத்தை விட்டு வெளியேறி ஐரோப்பிய நாடுகள் நோக்கி புலம்பெயர்வதும், தொடர்ந்து புலம்பெயர்வதற்கான விருப்பும், தமிழ் இளைஞர் மத்தியில் பெருமளவு அதிகரித்துவிட்டது.
இஸ்லாமிய கிளர்ச்சியாளர்கள்
எனவே ஈழத் தமிழரை ஒடுக்குவதில் சிங்கள தேசம் பெருவெற்றி அடைந்து விட்டது என்றே கூற வேண்டும். ஆனால் ஈழப்போராட்டத்தின் எதிர்மறை விளைவு தமிழர் விடுதலைப் போராட்டத்தை பயன்படுத்தி சிங்கள தேசத்தில் குருவிச்சையாக படர்ந்த இஸ்லாமிய கிளர்ச்சியாளர்கள் சிங்கள தேசத்தை இன்னும் 50 வருடத்தில் தமதாக்கக்கூடிய அதாவது இஸ்லாமிய சட்டத்தை நடைமுறைப்படுத்தக் கூடிய அளவுக்கு பெரும்பான்மையினராக பெருகி விடுவார்கள் என்ற அச்சம் சிங்கள தேசத்தில் ஏற்பட்டுவிட்டது.
அதனை ஆய்வு ரீதியாக "வியட் மக" என்ற சிங்கள அறிஞர் குழுவின் அறிக்கை கட்டியம் கூறிவிட்டது.
எனவே இப்போது முஸ்லிம்களை ஒடுக்குவது சிங்கள தேசத்தின் முதல் பணி ஆகிவிட்டது. அதற்கு இத்தகைய குண்டு வெடிப்புகளும் குண்டு வெடிப்பு புரளிகளும் சிங்கள பௌத்த பேரினவாத அரசாங்கத்துக்கு தேவையாக உள்ளது.
மியான்மாவின் பௌத்த அரசு ரொஹிங்கிய முஸ்லிம்களை எவ்வாறு துரத்தியதோ அவ்வாறான ஒரு நிலையை ஒரு நீண்ட கால திட்டத்துடன் படிமுறையாக நடத்தி முஸ்லிம்களை இலங்கை தீவில் இருந்து வெளியேற்றுவதற்கான அனைத்து வேலைகளையும் சிங்கள தேசம் தொடர்ந்து செய்யும். அதற்காக முதலில் இஸ்லாமிய பணக்காரர்கள் தொடர்ந்து குறி வைக்கப்படுவார்கள்.
இத்தகைய புரளிப் பதற்ற அரசியலுக்கு உள்ளே இன்னும் ஒரு அரசியல் உண்டு.
இன்று சிங்கள தேசத்தில் அரசியல் கட்சிகள் சீர்குலவைச் சந்தித்து இருக்கின்றன. ராஜபக்சகளின் செல்வாக்கு சற்று வீழ்ச்சி அடைந்திருக்கிறது. அதே நேரத்தில் கட்சிப் பலமின்றி, பலவீனமான தலைவராக ரணில் அதிகாரத்தில் உள்ளார்.
ஐக்கிய தேசிய கட்சி இரண்டாக உடைந்து ரணில் ஒருபுறமும் சஜித் மறுபுறமும் ஆக உள்ளனர். அதே நேரத்தில் ஜேவிபியினர் எந்நேரமும் குழப்பம் விளைவிக்க கூடிய அல்லது கிளர்ச்சிகளில் ஈடுபடக்கூடிய வாய்ப்புகள் சிங்கள தேசத்தில் உண்டு.
ரணிலும், ராஜபக்ச அரசாங்கமும்
இத்தகைய ஒரு கொதிநிலை ஏற்பட்டிருக்கின்ற பின்னணியில் சிங்கள ஆளும் குழாம் தொடர்ந்து தம்மையும், தம்கட்சியையும், அரசியல் அதிகாரத்தையும், அங்கீகாரத்தையும் தக்க வைப்பதற்கு கட்சிக் கட்டமைப்புப் பலமற்ற ரணில் இப்போது முப்படைகளையுமே கட்சித் தொண்டர்கள் போல செயற்பட்டு ஆட்சியாளர்களைப் பாதுகாப்பதற்கான முகவர்கள் ஆக்க வேண்டும்.
எனவே ஊடகங்கள் நம்பும் படியும், உலகம் நம்பும் படியும் ஒரு புரளியை கிளப்ப வேண்டியுள்ளது. அத்தகைய புரளி பல்பரிமாணம் கொண்டதாக அமைய வேண்டும். அது சிங்கள ராஜதந்திரத்தின் இயல்பான பண்பும் கூட. அந்த அடிப்படையிற்தான் இப்போது ரமழான் குண்டு வெடிப்பு கிளப்பப்பட்டு விட்டது. இந்தப் புரளியை உண்மை போல அனைத்து ஊடகங்களிலும் பேசு பொருளாக்கி விட்டார்கள்.
இதன் மூலம் உள்நாட்டில் படையினரை உஷார்படுத்தி வீதிகளில் இறக்கி பரபரப்பாக ஓடவிட்டு செயற்கையான ஒரு பதட்ட சூழ்நிலை உருவாக்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில் பிள்ளையையும் கிள்ளி தொட்டிலையும் ஆட்டுவது போல ரணிலும், ராஜபக்சக்களும் முஸ்லிம் தலைவர்களை அழைத்து அன்னியோன்னியமாக விருந்துண்டு, விருந்துண்ணும் காட்சிகளையும் ஊடகங்களில் பரப்பி அதன் மூலம் முஸ்லிம் மக்களின் ஆதரவையும் தம்பக்கம் திரட்ட முனைகின்றனர்.
அதே நேரத்தில் மேற்குலகம், இந்தியா சார்ந்த அழுத்தங்களையும் சற்று தணிப்பதற்கும், தம்மை தற்காப்பதற்கும் இஸ்லாமியப் பயங்கரவாதம் என்ற மாயை இலங்கை தீவுக்குள் ஊடகங்கள் வாயிலாக தோற்றுவித்து இந்த மாயமானை காட்டி குறிப்பிட்ட காலத்துக்கு அந்நிய சக்திகளின் அழுத்தங்களை ரணில் விக்ரமசிங்காவினால் இலகுவாக தற்காலிகமாக தடத்து நிறுத்தி கையாள முடியும்.
எனவே இப்போது ரமழான் குண்டு தாக்குதல் என்ற கேடயத்தை சிங்களதேச அரசியல் கையிலேந்தி தமது ஆட்சி அதிகாரத்தை தக்கவைத்துக் கொள்ளும் என்பதில் சந்தேகமில்லை. இனிவரும் அண்மைக் காலங்களில் இலங்கை அரசியலில் குழப்பங்கள் கொந்தளிப்புகள் ஏற்படப் போகின்றது என்பதற்கான முன்னறிவித்தலாக இதனைப் புரிந்து கொள்வதும் சரியானது.
இவ்வாறு புரியுமிடத்து தமிழர்
பக்க அரசியலை முன்கூட்டியே திட்டமிட வேண்டியதும் அவசியம்.

வீட்டை சுத்தம் செய்யும் போது கிடைத்த தந்தையின் பழைய பாஸ்புக்.., ஒரே இரவில் மகன் கோடீஸ்வரன் News Lankasri

பிரியங்கா தேஷ்பாண்டே திருமணத்தில் கலந்துகொண்ட விஜய் டிவி பிரபலங்கள்.. யார் யார் தெரியுமா, இதோ பாருங்க Cineulagam

ஆனந்தி கர்ப்பமாக இருக்கும் விஷயம், பளார் விட்ட நபர், இவர்களுக்கும் உண்மை தெரிந்ததா? சிங்கப்பெண்ணே புரொமோ Cineulagam
