உக்ரைன் தூதரகங்களுக்கு வரும் மர்ம பொதிகள்! பிண்ணனியில் ரஷ்யா செயற்படுவதாக குற்றச்சாட்டு
உக்ரைன் தூதரகங்களில் மர்மமான முறையில் மிருக கண்களை பொதிகளில் அனுப்பி வைத்துள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.
ஸ்பெயின் நாட்டில் செயல்படும் உக்ரைன் தூதரகத்தில் தொடர்ந்து 6 லெற்றர் வெடிகுண்டுகள் அனுப்பப்பட்ட நிலையில், தற்போது இந்த சம்பவம் வெளியாகியுள்ளது.
தொடர்புடைய பொதிகள் அனைத்தும் ஒருவகையான திராவகத்தில் ஈரப்படுத்தப்பட்டிருந்ததாகவும், அதன் வாசனையும் வண்ணமும் தனித்துவமாக இருந்தது எனவும் உக்ரைன் வெளிவிவகார அமைச்சகம் தெரிவித்துள்ளது.
குறிவைக்கப்படும் தூதரகங்கள்
மேலும், ஹங்கேரி, நெதர்லாந்து, போலந்து, குரோஷியா, இத்தாலி மற்றும் ஆஸ்திரியா நாடுகளில் உள்ள உக்ரைனிய தூதரகங்களுக்கு குறித்த மர்ம பொதி அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
ஸ்பெயின் நாட்டில் லெற்றர் வெடிகுண்டுகள் அனுப்பி வைக்கப்பட்ட சம்பவத்தில் ரஷ்யாவின் பங்கு இருப்பதாக அந்த நாட்டிற்கான உக்ரைன் தூதுவர் குற்றஞ்சாட்டியிருந்தார். இதுபோன்ற நடவடிக்கைகளை ரஷ்யா முன்னெடுக்கும் என்பது எங்களுக்கு தெரிந்தது எனவும் அவர் குறிப்பிட்டிருந்தார்.
இதனிடையே, மாட்ரிட் நகரில் அமைந்துள்ள அமெரிக்க தூதரகத்திலும் லெற்றர் வெடிகுண்டு போன்ற ஒன்றை அடையாளம் கண்டுள்ளனர்.
தற்போது மிருகங்களின் கண்களை பொதிகளில் அனுப்பி வைக்கப்பட்டுள்ள சம்பவத்தில், அதன் பொருள் என்ன என்பது தொடர்பில் விசாரிக்கப்படும் என அதிகாரிகள் தரப்பு தெரிவித்துள்ளது.
மேலும், வெளிவிவகார அமைச்சர் டிமிட்ரோ குலேபா தெரிவிக்கையில், சம்பந்தப்பட்ட அனைத்து தூதரகங்கள் மற்றும் துணை தூதரகங்களை பலத்த பாதுகாப்புடன் வைக்க உத்தரவிட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.