யாழ். மானிப்பாய் பிரதேசசபையின் அமர்விலிருந்து உறுப்பினர் வெளிநடப்பு
யாழ். மானிப்பாய் பிரதேசசபையின் இரண்டாவது அமர்வானது இன்றையதினம் தவிசாளர் ஜெசீதன் தலைமையில் ஆரம்பமானது.
இதன்போது இலங்கை தமிழரசு கட்சியின் உறுப்பினர் லோகப்பிரகாசம் ரமணன் தேசிய மக்கள் சக்தியின் செயற்பாடுகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து கருத்து தெரிவித்துவிட்டு சபையில் இருந்து வெளிநடப்பு செய்தார்.
இதன்போது சபையின் உப தவிசாளரும் வெளிநடப்பு செய்துள்ளார்.
ஜூலை கலவரம்
இதன்போது அவர் சபை அமர்வுக்கு முன்னர் கருத்து தெரிவிக்கையில், எமது இனமானது அழிக்கப்படுவதற்கு முக்கியமான காரணமாக இருந்தது 1983ஆம் ஆண்டு இடம்பெற்ற ஜூலை கலவரம்.
இந்த ஜூலை கலவரத்தின் போது தான் தமிழர்கள் அவர்களது தாயகம் நோக்கி விரட்டியடிக்கப்பட்டார்கள். அதன் பின் தான் எமது இளைஞர்கள் பலர் ஆயுதங்களை கையில் எடுத்தார்கள்.
செம்மணி புதைகுழியில் எமது பிஞ்சு குழந்தைகள் உட்பட இளைஞர்கள், யுவதிகள் என பலர் புதைக்கப்பட்டமைக்கு அடிப்படை காரணம் ஜூலை கலவரமே. அரசு இயந்திரம் சரியாக செயல்பட மறுக்கிறது. எமது இளைஞர்கள் யுவதிகளுக்கு என்ன நடந்தது?
வெளிநடப்பு
1983ஆம் ஆண்டு நடைபெற்ற ஜூலை கலவரத்திற்கு தீர்வு இதுவரை வழங்கப்பட்டதா? இவற்றையெல்லாம் கருத்தில் கொண்டு, இதற்கு எதிர்ப்பு தெரிவித்து நான் இந்த சபையை விட்டு ஐந்து நிமிடங்கள் வெளிநடப்பு செய்கின்றேன்.
இந்த இன அழிப்பு நடைபெற்றது உண்மையே, இன்றும் அதற்கு தீர்வு வழங்கப்படவில்லை என கருதுபவர்கள் என்னுடன் இணைந்து ஐந்து நிமிடங்கள் வெளி நடப்பு செய்யுங்கள் என கூறிவிட்டு வெளிநடப்பு செய்தார். அவருடன் இணைந்து உப தவிசாளரும் வெளிநடப்பு செய்தார்.
இருப்பினும் தமிழ் தேசியம் சார்ந்த கட்சிகளின் உறுப்பினர்களான் இலங்கை தமிழரசு கட்சியின் ஏனைய உறுப்பினர்கள், ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி உறுப்பினர்கள், அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் உறுப்பினர்கள், தமிழ் மக்கள் கூட்டணியின் உறுப்பினர்கள் எவரும் இனப்படுகொலைக்கு எதிர்ப்பு தெரிவித்து வெளிநடப்பு செய்யவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.




