இலங்கையில் பணியாற்றிய அமெரிக்க அருட்தந்தை மட்டக்களப்பில் காலமானார்
இலங்கையில் பணியாற்றிவந்த இயேசு சபையைச் சேர்ந்த அருட்தந்தை ஒருவர் மட்டக்களப்பில் காலமாகியுள்ளார்.
இலங்கை அந்நியர் ஆட்சிக்கு உட்பட்டிருந்த காலத்தில் இலங்கையின் கல்வி வளர்ச்சியில் அரும்பணியாற்றியவர்கள் மிசனறிகளாகும்.
இலங்கையின் பல பாகங்களும் வெள்ளையர்களின் ஆட்சியில் இருந்தபோது பாதிரியார்கள் கல்வியை வழங்குவதற்கு அர்ப்பணிப்பான சேவையினை வழங்கி வந்துள்ளனர்.
இவ்வாறான காலப்பகுதியில் இலங்கைக்கு வருகைதந்த இயேசுசபை துறவியாக இருந்து இறுதிவரையில் சேவையாற்றிய பாதிரியாரே மட்டக்களப்பில் உயிரிழந்துள்ளார்.
மட்டக்களப்பு மாவட்டத்தின் கல்வித்துறைக்கு பெரும்பங்காற்றிவரும் மட்டக்களப்பு புனித மைக்கேல் கல்லூரிக்கு 1947ஆம் ஆண்டு வருகைதந்து கல்வி வளர்ச்சிக்கு அரும்பணியாற்றிய இயேசுசபை துறவி அருட்தந்தை லலொயிட் லோறிஸ் தனது 94வது வயதில் நேற்று காலமானார்.
இலங்கையில் வாழ்ந்த இறுதி மிசனறியாக கணிக்கப்படும் இவர் கணித ஆசிரியராகவும் தொழில்நுட்ப கல்வி சார்ந்து புதிய புரட்சியை ஏற்படுத்தியவர்.
குறிப்பாக கிழக்கு தொழில்நுட்ப கல்லூரி என்ற நிறுவனம் ஊடாக தொழில்நுட்பம் சார்ந்த அறிவுள்ள இளைஞர்களை உருவாக்குவதில் நீண்டகாலமாக இவர் செயற்பட்டுவந்துள்ளார்.
அத்துடன் முன்னைய காலத்தில் மின்சார வசதியில்லாத காலப்பகுதியில் கிராம மக்கள் மின்சாரத்தினைப் பெற்றுக்கொள்ள வேண்டும் என்பதற்காக சூரிய சக்தியிலான மின்சாரத்தினைப் பெற்றுக்கொடுத்த பெருமையினையும் இவர் கொண்டுள்ளார்.
1927ஆம் ஆண்டு வைகாசி மாதம் 10ஆம் திகதி அமெரிக்காவில் பிறந்த அவர் தனது இறுதிக்காலம் வரையில் சமூக சேவையே நோக்காக கொண்டு வாழ்ந்துவந்த நிலையில் மட்டக்களப்பு புனித ஜோசப் முதியோர் இல்லத்தில் காலமானார்.
அவரது உடலம் மாணவர்கள் மற்றும் பொதுமக்களின் அஞ்சலிக்காக நேற்று புனித மைக்கேல் கல்லூரியில் வைக்கப்பட்டிருந்ததுடன் இன்று மட்டக்களப்பு புனித மரியால் பேராலயத்தில் இளைப்பாற்று திருப்பலி நடைபெற்றது. மட்டக்களப்பு மறைமாவட்ட ஆயர் பொன்னையா ஜோசப் ஆண்டகை தலைமையில் இளைப்பாற்று திருப்பலி நடாத்தப்பட்டு புதூர் ஆலையடிச்சோலை மயானத்தில் இன்று நல்லடக்கம் செய்யப்பட்டுள்ளது.
மட்டக்களப்பு மாவட்டத்தின் கல்வித்துறையின் வளர்ச்சியின் பெரும்பங்காற்றிய இறுதி மிசனறியாக கருதப்படும் அருட்தந்தை லலொயிட் லோறிஸுக்கு பெருமளவானோர் இன்று தனது இறுதி வணக்கத்தினை செலுத்தியுள்ளனர்.







திருமணத்திற்கு ஒப்புக்கொண்ட முத்துவை அசிங்கப்படுத்தும் அருண்.. சிறகடிக்க ஆசை சீரியல் பரபரப்பு புரொமோ Cineulagam

பங்கர் பஸ்டராக உருவெடுக்கும் இந்தியாவின் அக்னி ஏவுகணை - சீனா, பாகிஸ்தானுக்கு கடும் அச்சுறுத்தல் News Lankasri
