நிராகரிக்கப்பட்ட பசளைக்கு பதிலாக புதிய பசளையை வழங்க முடியாது:சீன நிறுவனம்
இலங்கையால் நிராகரிக்கப்பட்ட சேதனப் பசளைக்கு பதிலாக புதிய பசளையை வழங்க முடியாது என சீனாவின் ஷின்டாவோ என்ட் பயோடெக் நிறுவனம் இலங்கைக்கு அறிவித்துள்ளது.
அந்த நிறுவனத்தின் இலங்கையின் பிரதிநிதி ஊடாக இந்த அறிவிப்பு செய்யப்பட்டுள்ளதாக கமத்தொழில் அமைச்சின் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
இழப்பீட்டை செலுத்த வேண்டிய நிலைமை
ஏற்கனவே அனுப்பிய பசளை தொகை பெற்றுக்கொள்ளவில்லை என்றால், அதற்காக இழப்பீடு செலுத்த வேண்டிய நிலைமை ஏற்படும் என நிறுவனத்தின் இலங்கை பிரதிநிதி கூறியுள்ளார்.
நிராகரிக்கப்பட்ட பசளை தொகைக்கு பதிலாக வேறு பசளை தொகையை வழங்க முடியாது எனவும் அனுப்பி வைக்கப்பட்ட பசளையை நிராகரித்தால், அது நிறுவனத்திற்கு அவப்பெயரை ஏற்படுத்துவதாக கருதப்படும் என நிறுவனம் சுட்டிக்காட்டியுள்ளதாகவும் இலங்கை பிரதிநிதி தெரிவித்துள்ளார்.
இதனடிப்படையில், சுமார் ஒன்றரை மில்லியன் அமெரிக்க டொலர்களை இழப்பீடாக செலுத்த நேரிடும் எனவும் அவர் கூறியுள்ளார்.
நிராகரிக்கப்பட்ட சீனாவின் பசளை கப்பலுக்கு செலுத்த வேண்டிய 6.7 மில்லியன் அமெரிக்க டொலர்களை செலுத்தியுள்ள போதிலும் அந்த தொகைக்கு ஏற்ப பசளை இலங்கைக்கு இதுவரை கிடைக்கவில்லை.