அநுர அரசாங்கத்தின் முக்கிய பதவியில் ரணிலின் ஆலோசகர்..! சபையில் போட்டுடைக்கப்பட்ட உண்மை
ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவின் தற்போதைய பொருளாதார ஆலோசகரான துமிந்த ஹூலங்கமுவ, முன்னர் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் பொருளாதார ஆலோசகராகப் பணியாற்றினார் என எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ச டி சில்வா கூறிய குற்றச்சாட்டை அமைச்சர் பிமல் ரத்நாயக்க முற்றாக நிராகரித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் நேற்று (21.10.2026) உரையாற்றிய போது ஹர்ச டி சில்வா வெளியிட்ட கருத்து முற்றிலும் தவறானது என இன்று (22.10.2026) தெரிவித்த அமைச்சர் பிமல் ரத்நாயக்க, அவர் தனது கூற்றைத் திருத்திக் கொள்ள வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.
பிமல் ரத்நாயக்கவின் தெளிவுப்படுத்தல்
துமிந்த ஹூலங்கமுவ, ரணில் விக்ரமசிங்கவுக்கோ அல்லது வேறு எந்தவொரு முன்னாள் ஜனாதிபதி அல்லது பிரதமருக்கோ ஒருபோதும் பொருளாதார ஆலோசகராகச் செயற்படவில்லை என்று அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெளிவுபடுத்தினார்.
இலங்கை வர்த்தகச் சபையின் தலைவராகப் பணியாற்றிய காலத்தில் அவர் பல்வேறு குழுக்களில் அங்கத்துவம் வகித்த போதிலும், அவை அனைத்தும் வர்த்தகச் சமூகத்துடனான அவரது பொறுப்புகள் சார்ந்த அமைப்புகளே அன்றி, ரணில் விக்ரமசிங்கவின் பொருளாதார ஆலோசகராக வழங்கப்பட்ட நியமனங்கள் அல்ல என அமைச்சர் விளக்கமளித்தார்.

உத்தியோகபூர்வ பொருளாதார ஆலோசனை
அத்துடன், தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் கீழ் மட்டுமே ஹூலங்கமுவ உத்தியோகபூர்வ பொருளாதார ஆலோசனைப் பதவியை ஏற்றுக்கொண்டுள்ளார் என பிமல் ரட்நாயக்க குறிப்பிட்டார்.
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் பொருளாதாரக் கொள்கைகளைக் கடுமையாக விமர்சித்து வந்த தற்போதைய அரசாங்கம், அவருக்கு ஆலோசனை வழங்கிய அதே பொருளாதார நிபுணரை ஏன் மீண்டும் நம்பியிருக்கிறது என ஹர்ச டி சில்வா, நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்பியிருந்த நிலையிலேயே, அமைச்சரின் இந்தப் பதில் வழங்கப்பட்டுள்ளது.