விவசாயிகளிடமிருந்து அறவிடப்பட்ட பல கோடி ரூபா நிதி : அம்பலமான தகவல்
கிளிநொச்சி மாவட்டத்தில் விவசாயிகளிடமிருந்து அறவிடப்பட்ட பல கோடி ரூபா நிதி திணைக்களங்களின் அனுமதி இன்றி முறைகேடாக பயன்படுத்தப்பட்டுள்ளமை தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் ஊடாக பெற்றுக் கொள்ளப்பட்ட தகவல்கள் மூலம் அம்பலமாகியுள்ளது.
கிளிநொச்சி இரணமடு குளத்தின் கீழ் உள்ள கமக்கார அமைப்புக்களை கொண்டு கடந்த 2013 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட கமக்கார அமைப்புக்களின் சம்மேளனம் கடந்த 2015 ஆம் ஆண்டு முதல் 2024 ஆம் ஆண்டு வரையான காலப்பகுதியில் விவசாயிகளிடமிருந்து அறவிடப்பட்ட பல கோடி ரூபா நிதி முறைகேடாகவே பயன்படுத்தப்பட்டுள்ளது.
மீளவும் பதிவு செய்யப்படாமல்...
இந்த நிதி முறைகேடுகளுக்கு பின்னால் மாவட்டத்தில் உயர் பதவியில் உள்ள அதிகாரிகளும் உடந்தையாகவே இருந்துள்ளனர் என தொடர்ச்சியாக குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டு வருகின்றன.

இது தொடர்பில் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் மூலம் பெறப்பட்ட தகவல்களின் மூலம் பல்வேறு விடயங்கள் அம்பலமாகியுள்ளன.
அதாவது கடந்த 2015 ஆம் ஆண்டு முதல் 2019 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் வரையான காலப்பகுதிகளுக்கான கணக்கறிக்கைகளின் படி விவசாயிகளிடமிருந்தும் விவசாய அமைப்புகளிடமிருந்தும் பெற்றுக் கொள்ளப்பட்ட பல கோடி நிதி திணைக்கள அனுமதிகள் இன்றி முறைகேடாக அதன் பொருளாளர் மற்றும் பதவியில் உள்ளவரால் செலவிடப்பட்டுள்ளது.
அத்துடன் 2019 ஆம் ஆண்டு ஜனவரி முதல் 2024 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் வரையான கணக்குகள் கணக்காய்வாளரினல் மேற்கொள்ளப்பட்டுள்ள போதும் அதில் மாதாந்த கணக்குகள் தயாரிக்கப்பட்டு மாதாந்த நிர்வாக சபையில் சமர்ப்பிக்கப்படவில்லை என்றும் அதன் யாப்பில் உள்ள உபசட்ட விதியின் ஒன்பதாவது பிரிவின்படி அமைப்புகளிடமிருந்து அங்கத்துவப் பணம் பெற்றுக் கொள்ளப்பட்ட விபரங்கள் எதுவும் சமர்ப்பிக்கப்படவில்லை.
மேலும் நிதி கையாளுதல் தொடர்பில் உபசட்டவிதியின் 14 வது பிரிவின்படி பத்தாயிரம் ரூபா வரையான நிதியே கையாள்வதற்கு அதிகாரம் உள்ள போதும் தீர்மானங்கள் இன்றி பல கோடி ரூபாய் நிதி கையாளப்பட்டுள்ளன போன்ற பல்வேறு அடிப்படை விடயங்களை சுட்டிக்காட்டி உள்ளார்.
இதே நேரம் கடந்த 2022ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 24 ஆம் திகதி குறித்த அமைப்பினது பதிவு நீக்கப்பட்டுள்ளது என ஆணையாளர் நாயகத்தினால் அறிவுறுத்தப்பட்டுள்ள போதும் இது வரை மீளவும் பதிவு செய்யப்படாமல் சட்ட விதிகளுக்கு மாறாகவே இயங்கி வருகின்றமை அனுமதிகளின்றி பெருந்தொகை நிதியை முறைகேடாக பயன்படுத்தி வருகின்றமை தொடர்பில் மாவட்டத்தில் பலரும் விசனங்களை முன் வைத்துள்ளனர்.